பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நலம் நாடிய சூழ்ச்சிகள்

137

வந்திருந்த தத்தை சிறிது கலங்கினாள். அப்போது சாங்கியத் தாய், “உன் காதற் கணவன் அரசியல் வாழ்வில் உயர்வு பெறவே இத்தகையதொரு சூழ்ச்சி செய்யப்படுகிறதே ஒழிய வேறில்லை” என்று கூறித் தேற்றினாள். அதற்குள் யூகியே வாசவதத்தையின் முன் வந்து அவளுக்குப் பல ஆறுதல் உரைகளைக் கூறி, “இவை யாவும் உன் கணவன் தன்னை உணர்ந்து கொள்ளவும் பிறரால் ஆளப்பட்டு வரும் தன் நாட்டை மீட்கும் உணர்வு பெறவும் பிங்கல கடகர்களாகிய தன் தம்பியர் துயர் போக்க வேண்டுமென்ற கருத்துக் கொள்ளவுமே செய்யப்பட்ட சூழ்ச்சி இது. இந்தச் சூழ்ச்சி நிறைவேற வேண்டி என் பொருட்டும் உன் கணவன் பொருட்டும் சிலநாள் நீ இந்தப் பிரிவைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அருள்கூர்ந்து நீ எனக்கு இவ் வரத்தை அளிப்பாயாக” என்று யூகி தத்தையை வேண்டிக் கொண்டான். அந்த உருக்கமான வேண்டுகோள் தத்தையின் மனத்தையும் கவர்ந்துவிட்டது. இதுவரை தன்னிடம் பேசுபவன் யூகி என்றே அவள் எண்ணவில்லை. சாங்கியத் தாய், படத்தைக் கொண்டுவந்து உதயணனிடம் காட்டியபின் யூகி இறந்துவிட்டான் என்றே எண்ணி வந்தாள் அந்தப் பேதைப் பெண். இதுவரை யூகியை அவள் நேரிற் கண்டதும் இல்லை. இப்போது தன்னிடம் பேசுபவன் உதயணனுக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவனாக இருக்க வேண்டுமென்றே அவள் எண்ணினாள். சாங்கியத் தாய் அவளுடைய சந்தேகத்தைப் புரிந்து கொண்டவள்போல, அவனே யூகி என்பதையும் அவன் இறந்ததாக உருவகம் செய்யப்பட்ட படம் வெறும் கற்பனை என்பதையும் மீண்டும் அவளுக்கு விளக்கமாகக் கூறினாள். அது கேட்ட தத்தை நம்பிக்கையுடன் “முன்பு உஞ்சையில் சிறை நீங்க உதவிய நீயிர், என் கணவனுக்கு இன்றும் நலமே நாடுவீர். எனவே நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்து அரசனை வழிக்குக் கொணர்க” என்று கூறி அவர்கள் திட்டத்துக்குத் தானும் ஒத்துழைப்பதாக வாக்குக் கொடுத்தாள் வாசவதத்தை யூகி மனம் மகிழ்ந்து, இனி உதயணன் பழைய துன்பங்கள் நீங்கி நலமுறல் நிச்சயம்