பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

அவசர அவசரமாக மார்பிலணைத்த மாலையைக் கழுத்தில் அணிந்துகொண்டு, தான் பூசிக் கொள்வதற்காக அதனுடன் உதயணன் வைத்திருந்த சந்தனத்தையும் பூசிக்கொண்டு புறப்பட்டாள். இந்தச் செய்கைகளினால் உதயணனையே தழுவிக் கொண்டதுபோன்ற ஆனந்தம் அவளுக்கு ஏற்பட்டது. இதனால் அவள் உடலெங்கும் இன்பப் பசலை பரந்ததுபோல ஓருணர்ச்சி தோன்றியது. இவ்வாறு காதல் நிறைந்த உணர்ச்சியோடு புன்னை மரத்தடியைக் கடந்து பொய்கைக் கரைக்குப் பதுமை வரவும் யாப்பியாயினி எதிர்ப் படவும் சரியாக இருந்தது. பதுமையை இந்தக் கோலத்தோடு கண்ட யாப்பியாயினி விளையாட்டாக அவள் பின்புறம் போய் நின்றுகொண்டு, அவளை வம்புக்கு இழுக்க ஆரம்பித்தாள்! “பெண்ணே! நீ யார் தெரியவில்லையே? என் தோழி ஒருத்தி இங்கே இருந்தாள். பதுமாபதி என்பது அவளுடைய பெயர். அவளும் உன் போலவே தோற்றமுடையாள்! இப்போது அவள் எங்கே சென்றாளோ? காணோம்!” என்று பதுமையை நோக்கிக் குழைந்து வினவினாள் யாப்பியாயினி. அவள் வினாவில் குறும்பு விளையாடியது! இகழ்ச்சியும் குறிப்பாக ஒலித்தது! பதுமை இதற்கு விடை சொல்லவில்லை. நாணித் தலை குனிந்தாள். அவள் கால்விரல்கள் நிலத்திற் கிளைத்துக் கோலமிடத் தொடங்கின.

யாப்பியாயினி பதுமையை நோக்கிக் கலகல வென்று நகைத்தாள். இங்கே இப்படியிருக்க, இவைகளை யெல்லாம் மறைந்திருந்து நன்றாக நோக்கிய உருமண்ணுவா அங்கே தன் நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு கூறிக் கொண்டிருந்தான். உதயணன் உட்பட அநேகமாக எல்லோருமே மறைந்திருந்து இந் நிகழ்ச்சியைக் கண்டவர்கள்தாம். இருப்பினும் உருமண்ணுவா ஆர்வம் மேலிடத் தான் கண்டவற்றைக் கூறினான். அப்போது உதயணனும் அங்கே வந்து சேர்ந்தான். அந்த நேரத்தில் அவர்களைச் சேர்ந்தவருள் வயந்தகன் ஒருவன்தான் தோட்டத்திலிருந்து வரவில்லை. உண்மையாகவே அவள் உதயணனைக் காதலிப்பதை அறிந்து