பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

செய்திகளை எல்லாம் ஆர்வத்தோடு விசாரித்தான். உதயணன் தனக்கு வவிய வந்து உதவி செய்த பண்பை வாய் நிறையப் புகழ்ந்தான். தனக்குப் உதயணனின் தந்தை சதானிகனுக்கும் இருந்த நட்புணர்ச்சியின் கனிந்த நிலையைப் பற்றி விரிவாக எடுத்து உரைத்தான்.

“நான் திகைத்து மலைத்துக் கொண்டிருந்த நிலையில், உதயணன் இங்கு வந்து என் பகைவர்களை ஓடச் செய்தது நான் பெற்ற பெரும்பேறு ஆகும்” என்று போற்றி வியந்தான். வயந்தகன் முதல் நாள் நிகழ்ந்தவற்றைத் தருசகனுக்குக் கூறினான். தருசகன் வயந்தகனின் மூலமாக உதயணன் அப்போது இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அவனை அழைத்துவரத் தன் பட்டத்து யானையை அனுப்பினான். உடனே அரண்மனை உதயணனை வரவேற்பதற்கேற்றபடி அலங்கரிக்கப்பட்டது. தருசகன், உதயணனை ஏற்ற முறையில் வரவேற்றுப் போற்றி நன்றி செலுத்திக் கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான். தருசகனின் அழைப்பைக் கேட்டதும் உதயணனும் உருமண்ணுவா முதலிய அவன் தோழரும், பிறவீரர்களும் மனமகிழ்ச்சியோடு அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு உதயணனுடன் அரண்மனைக்குப் புறப்பட்டனர். இப்போது அவர்களில் ஒருவராவது மாறுவேடத்துடன் இல்லை. எல்லோரும் துணிந்து சுய உருவத்துடனேயே சென்றார்கள். உதயணன், தருசகன் மன்னன் அனுப்பியிருந்த பட்டத்து யானைமேல் ஏறிக்கொண்டு புறப்பட்டான்.

தன் அரண்மனை வாயிலிலேயே வீரர்களும் தோழர்களும் புடைசூழ யானைமேல் வரும் உதயணனைத் தருசகன் எதிர்கொண்டு மரியாதையாக வரவேற்றான். தருசகனுடைய அரசவையைச் சேர்ந்த சிலர், “எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை என்று, தெளிவாகச் சிந்தித்து அறியாமல் உதயணன் போன்ற வேற்றரசர்களை உள்ளே அழைத்துக் கொள்வது சரியல்ல” என்று அவனை எச்சரித்தனர். தருசகன் அவர்களுக்கு, உதயணன் உதவிப் பண்பு மிகுந்தவன்