பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

அன்பும் கொண்டிருந்தான் அவன். உதயணனும் படைகளும் நகர எல்லைக்கு வந்து சேர்ந்தவுடன் தருசகன் எதிரே வந்து வரவேற்றான். உதயணனைப் போற்றிப் புகழ்ந்து இரண்டாம் முறையாகத் தன் நன்றியைத்கூறிக் கொண்டான். ‘தருசகனைக் கண்டதும் கேகயத்தரசன் மரணத்தை அவனுக்கு எவ்வாறு கூறுவது’ என்று எண்ணித் தயங்கினான் உதயணன். பின்பு மனத்தைத் தேற்றிக்கொண்டு, தான் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் உருமண்ணுவாவோடு களத்தில் முன்னே முன்னே சென்று பகைவர்களை வருத்தும் ஆர்வத்தோடு போரிட்டதனால் கேகயன் எலிச்செவியின் வாளுக்கு இரையானான் என்பதையும் உருமண்ணுவாவைப் பகைவர் பிடித்துச் சென்றனர் என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தான். இந்தச் செய்திகளைக் கேட்ட தருசகன் பெரிதும் வருந்தினான். “என் தங்கையை மணம் செய்துகொள்ள ஆர்வமுற்று, இங்கே அவன் வந்தான். அந்த ஆர்வத்தை நான் அவனுக்குப் பூர்த்தி செய்து வைப்பதற்குமுன் எனக்காக அவனே போரில் கடமை பூண்டு உயிர்த் தியாகம் செய்து விட்டானே!” என்று சொல்லி உள்ளம் உருகிய தருசகனை உடனிருந்தவர்கள் தகுந்த வார்த்தைகளைக் கூறி ஆற்றுவித்தார்கள்.

உடனே அன்று இரவிலேயே போர்க்களத்திலிருந்து கேகயனின் சடலத்தைக் கொணரச் செய்துமுறைப்படி கருமங்களைச் செய்தனர். ஆசை தணியாமலே வெந்து அழிந்து போனது கேகயனுடல். எல்லாம் முடிந்து பின் தருசகனும் உதயணனும் தலை நகரத்திற்குப் புறப்பட்டனர். நகரமக்கள் உதயணனைப் பலவாறாகப் புகழ்ந்து வரவேற்றனர். இவன் அல்லவா உண்மை வீரன்?’ என்று புகழ்ந்தது மகத நாட்டு மக்கள் கூட்டம். ‘இவனுடைய இத்தகைய வெற்றிகளை எல்லாம் பார்க்கக் கொடுத்து வைக்காமல் இறந்து போன இவன் தேவி வாசவதத்தை பாக்கியமில்லாதவளே’ என்று சிலர் அவளைப் பழிப்பது போலப் பேசினர். தத்தை இறந்த துயரம் தாங்காமல்தான் உதயணன் இங்கு வந்தான். அதனால்