பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

நிலையிலும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கப் பழகிய உள்ளம். அரண்மனையில் விருந்தினனாகத் தனிமையும் அமைதியும் மிக்க சூழ்நிலையில் தங்கி இருந்த அப்போதும் கூட அவன் நெஞ்சம் பழைய இன்ப நினைவுகளில் ஆழ்ந்திருந்தது. சிந்தித்துச் சிந்தித்துப் பழகித் தழும்பேறிய உள்ளத்திற்குத் தனிமை என்பது பலநாள் பசிக்குப் பிறகு கிடைத்த சுவைமிகுந்த உணவைப் போன்றது. பதுமையோடு கன்னிமாடத்திலும் காமன் கோட்டத்திலும் பழகிய மகிழ்ச்சி நினைவுகள் அவன் மனத்தில் மலர்ந்தன.

உதயணன் பழைய நினைவுகள் என்பனவற்றைத் திராட்சை மதுவைப் போல மயக்கம் அளிக்கும் இயல்புடையனவாகக் கருதினான். அவற்றை எண்ணிப் பார்ப்பதில் தனிப்பட்ட ஒருவகைக் களிப்பு இருந்தது. அரண்மனையில் விருந்தினனாகத் தங்கியிருந்த அந்த நிலையில் தான் பதுமையோடு பழகிய பழைய நிகழ்ச்சிகளை எண்ணுதலாகிய நினைவுப் புணை கொண்டு தனிமைக் கடலைக் கடந்து கொண்டிருந்தான் உதயணன். ‘பதுமையிடம் தான் கொண்ட காதல் இப்படி வெறும் நினைவு மாத்திரையோடு நின்று விடக்கூடாதே!’ என்ற ஏக்க உணர்வும் அப்போது அவனுக்கு உண்டாகும். ‘தங்கள் காதலை நிலையாக இணைத்துக் கொள்ளத் திருமண உறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்! அதை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளலாம்?’ என்று சிந்திக்கத் தொடங்கினான் அவன். ‘முறையாக, இவை நடக்க வேண்டியவை’ என்னும் விளக்க முடியாத நியதிக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளை விதி தானே பொறுப்பேற்று நடத்தி வடுகிறது. அத்தகைய நிகழ்ச்சிகளோடு சம்பந்தம் உடைய யாவருக்கும், அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஏற்ற மனப்போக்கு, எண்ணங்கள் முதலியவற்றையும் விதியே உண்டாக்கிக் கொடுக்கிறது என்றுகூடச் சொல்லலாம். இல்லை என்றால் தருசக வேந்தனுக்கும் அப்போது ‘பதுமையை உதயணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தால் என்ன?’ என்ற சிந்தனை தோன்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.