பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேனாபதி பதவி

287

போன அமைச்சர்களில் இவர்களாவது தீயில் சாகாமல் பிழைத்து வந்தார்களே என்று அவனுக்கு மகிழ்ச்சி ஒரு புறம். ‘எப்படித் தப்பினர்’ என வியப்பு ஒருபுறம்! ‘தன்னுடைய காதில் அந்தச் செய்திகளை வந்து கூறவேண்டும் என்பதற்காவே, அவர்களை வேண்டுமென்றே உயிரோடு தப்பவிட்டு அனுப்பியிருக்கிறான் உதயணன்’ என்பது அவனுக்கு எப்படித் தெரியமுடியும்? இந்த நிலையில், போனவர்களை உதணயன் சிறை செய்து தீயிட்டதற்காகத்தான் மிகவும் வருந்துபவன்போல ஆருணியின் ஆறுதலைப் பெறுவதற்காக நடித்தான் வருடகாரன். ‘உண்மையாகவே உதயணனைப் பகைத்துக் கொண்டு வருடகாரன் தங்கள் பக்கம் சேர்ந்திருக்கிறான்’ என்று வந்தவர்கள் மூலமாகவும் அறிந்தபோது, ஆருணிக்கு அவன்மேல் உண்மையா பற்றும் விருப்பமும் ஏற்பட்டன. தன் படைகளோடும் அரசவையைச் சேர்ந்த அமைச்சர்கள், தளபதிகளுடனும் வருடகாரனைச் சந்திப்பதற்காக, அவன் இருப்பிடத்திற்கு ஆருணியே தேடிக் கொண்டு நேரிற் சென்றான்.

ஆருணியை வருடகாரன் வணங்கி, மதிப்போடு வரவேற்றான். வருடகாரன் கண்ணிர் சிந்தியவாறே, உதயணனால் சகுனி கெளசிகன் முதலியவர்கள் தீயிலே கொல்லப்பட்ட செயலுக்காகத் தன் வருத்தத்தை ஆருணியிடம் தெரிவித்துக்கொண்டான். “இந்த அடாத செயலுக்காகவாவது நாம் உடனே உதயணனைப் பழி தீர்த்துக்கொள்ள வேண்டும். அவன் இப்போது மலைப்பக்கத்தை அரணாகக் கொண்டு அங்கே படைகளோடு தங்கியிருக்கின்றானாம். உடனே நாம் படையோடு அங்கே சென்று அவனைச் சின்னா பின்னப்படுத்த வேண்டும்!” என்று போலி ஆவேசத்தோடும் ஆத்திரத்தோடும் வருடகாரன் கூறியபோது, ஆருணி அதை மெய்யென்றே நம்பி, உடனே அப்போதே படையோடு புறப்படச் சம்மதித்து விட்டான். அதோடு பதினாறாயிரம் வீரர்கள் அடங்கிய தன் பெரிய படையை நடத்திச் செல்லும் சேனாபதிப் பதவியை, அப்போதே உடனடியாக வருடகாரன்