பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரச்சோதனன் தூது

343

தன் தாயை அவளிருக்கும் இடத்திற் சென்று கண்டு, அவள் விரும்பிய எல்லாவகைத் தானங்களுக்கும் ஏற்ற பொருள்களை வழங்குமாறு செய்தான். ஒரு நாட்டையே தன் தாயின் தானத்திற்காகக் கொடுத்தான் உதயணன்.

பிற்பாடு தன் பட்டத்துத் தேவிமார்களான வாசவதத்தைக்கும் பதுமாபதிக்கும் வேண்டிய ஆடல்மகளிர், பாடல் மகளிர், பிற அலங்காரப் பொருள்கள் முதலியவற்றைப் பகுத்து அளித்து அவர்களை மகிழ்வித்தான். புதிய பல அணிகலன்களையும் அவர்களுக்காகச் செய்வித்து வழங்கினான்.

பாராட்டு விழா நிகழ்ந்து முடிந்தபின், கோசாம்பி நகரத்து அரண்மனை வாழ்வு இன்பமும் அமைதியுமாகக் கழிந்து வந்தது. அவ்வாறிருக்கும்போது ஒருநாள் யூகியும் உதயணனும் தனித்திருந்து உரையாடிக் கொண்டிருந்த நிலையில் அரண்மனை வாயிற்காவலன் வந்து உஞ்சை மன்னர் பிரச்சோதனனிடமிருந்து தூதுவர்கள் வந்திருப்பதாகக் கூறினான். உதயணன் உடனே பெருமகிழ்ச்சியுற்றுத் தூதுவர்களைத் தகுந்த மரியாதைகளோடு உள்ளே அழைத்து வருமாறு காவலனுக்கு ஆணையிட்டான். யூகியும் தானுமாக அவர்களை வரவேற்பதற்கும் ஆயத்தமாயினான். துதுவர் கூட்டத்திற்குப் பதுமை என்னும் பெயரையுடைய பெண் ஒருத்தி தலைமை தாங்கி வந்திருந்தாள். நீதி நூல்களிலும் அரசியல் நூல்களிலும் முதிர்ந்த அறிவும் பயிற்சியும் உடையவள் அந்தப் பெண். தூதுவருக்கு வேண்டிய எல்லாப் பண்புகளும் அவள்பாற் பொருந்தியிருந்தன. காண்பதற்கு அழகும் கவர்ச்சியும் அளிக்கவல்ல வனப்பான தோற்றத்துடனே விளங்கினாள் அவள். அவளுடன்கூட வேறு கலைஞர்களும் உஞ்சை நாட்டு அரசியலறிஞரும் பிரச்சோதனன் தன் மகள் தத்தைக்குப் பரிசிலாக அனுப்பிய பொருள்களும் தோழிப் பெண்களும் வந்திருந்தனர். ஐம்பது தேர்களையும் அழகிய தோழிப் பெண்கள் ஓராயிரவரையும், வாசவதத்தையின் செவிலித்தாய் நற்றாய் முதலியவர்கள்