பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மந்தர முனிவர் வந்தார்

383

வேண்டாம். அவளை இவர் மணந்து கொள்ளட்டும், அதற்காக இவ்வளவு தொலைவு தேடிவந்து வேண்டிக் கொண்டு நிற்கும் அந்த முனிவர் ஏமாற்றம் அடையக் கூடாது இப்படித் தன்மனத்திற்குள் எண்ணிப் பார்த்தபின் பெரிதும் மகிழ்ந்து, உதயணனிடம் தனது சம்மதத்தைத் தெரிவித்தாள் வாசவதத்தை. உதயணனும் மகிழ்ந்தான்.

உதயணன் மந்தரமுனிவரிடம் விரைந்துவந்து தன் உடன்பாட்டைத் தெரிவித்தான். முனிவரும் மகிழ்ந்தார். விரிசிகையை மணம் செய்துகொள்ள வாய்த்த பெரும் பேற்றை எண்ணிச் சில பல தானங்களைச் செய்தான் உதயணன். சில நாள்கள் அவனோடு கோசாம்பி நகரில் தங்கிவிட்டு, விரிசிகையை அழைத்து வருவதற்காக இலாவாண மலைச்சாரலுக்குப் புறப்பட்டார் மந்தர முனிவர். விரிசிகையையும் அவள் தாயையும் அழைத்துக் கொண்டு விரைவில் வருமாறு வேண்டிக்கொண்டு, உதயணன் அவருக்கு விடைகொடுத்து அனுப்பினான். அப்போதுதான் ஒரு திருமணம் முடிந்து அந்தக் கோலாகலத்தின் சுவடு மறைந்திருந்தது கோசாம்பி நகரத்தில். உடனே விரிசிகையின் திருமணச் செய்தி பரவவே பழைய கோலாகலமே எங்கும் மீண்டும் குறைவின்றி நிறைந்தது. ‘விரிசிகை இலாவாண மலையிலிருந்து எப்போது வருவாள்? அவளைக் கண் நிறையக் காண்கின்ற நல்ல பாக்கியம் என்றைக்குக் கிட்டும்?’ என்ற ஆவல் நிறைந்த நினைவுகளோடு கோசாம்பி நகரம் முழுவதுமே அவளுடைய நல்வரவை நாள்தோறும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. நகரத்தின் தலைவாயிலும் பெருவீதிகளும் நன்றாக அலங்கரிக்கப் பெற்று ஆரவாரத்தோடு விளங்கின. வீதிகளுக்குப் புதுமணல் பரப்பிப் பந்தலிட்டனர். வீடுகளிலும் மாடங்களிலும், மகிழ்ச்சியின் சின்னங்களாகிய அணிகளும் கொடிகளும் இலங்கின. நகரெங்கும் யார் யாரைச் சந்தித்தாலும் விரிசிகையைப் பற்றியும், விரிசிகையின் திருமணத்தைப் பற்றியும், அவள் என்றைக்கு வருகின்றாள் என்பதைப் பற்றியுமே பேசினர். வானுலகிலிருந்து வரும் தேவகன்னிகை