பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

 சுண்ணங்கள் இடித்தனர். தோணிகளும் படகுகளும் துறை தொறும் குழுமின. வான் கிளிர்ந்ததுபோல வனப்பொடு பொலிந்தது அவ் வளநகர். நாளைக்கு நீராட்டுவிழா நெருக்கடியில்தான் யூகியின் சபதம் நிறைவேற வேண்டும். விழா ஆரவாரத்தில் மக்களும் அரசரும் தம்மை மறந்திருப்பர். நகரில் ஈ காக்கை இராது. யாவரும் நீர்த்துறை சென்றிருப்பர். அந்நேரத்தில் நகர்க்குத் தீ மூட்டிவிட்டு நீர்த் துறையிலுள்ள உதயணனைத் தத்தையுடன் நாடு கடத்தி விடுவது என்பதுதான் யூகி போட்டிருந்த திட்டம்.

விழா வெறும் நீராட்டு விழாவாக மட்டும் வரவில்லை. உவகைத் திருவிழாவாக வந்தது. ஊர் களிக்கும் பெரு விழாவாக வந்தது. விழா யாத்திரை தொடங்கியது. யாழுங் குழலும் நல்லிசை எடுப்ப, முரசும் முழவும் ஒலி வளர்க்க ஆரவார யாத்திரை ஆரம்பமாகிவிட்டது. ஆடவர், பெண்டிர், சிறார் அனைவரும் விழா யாத்திரையிற் கலந்து கொண்டனர். குதிரையேறிச் செல்வோரும் யானையேறிச் செல்வோரும் கொல்லப் பண்டிகளிற் செல்வோரும் பல்லக்குகளிற் செல்வோருமாகப் பரவச யாத்திரையை நடத்தினர். ஊரின் கட்டளை வாயிலைக் கடந்து சென்ற மக்கள் கூட்டம் கடல்போல விளங்கிற்று.

மக்கள் ஆற்றங்கரையை அடைந்தனர். ஆற்றின் இரு கரையிலும் அசோக மரங்களும் இளங் கமுக மரங்களும் செறிந்து விளங்கின. பல சோலைகளில் மயிலும் கிளியும் மந்தியும் குயிலும் பயின்று விளையாடின. தோட்டத்திலுள்ள பெரிய மரங்கள் தோறும் அழகிய ஊஞ்சல்கள் (ஊசல்கள்) தொங்கின. ஊசல்களிலெல்லாம் ஆடும் மக்களின் கூட்டம் நிறைந்திருந்தது. அக் காட்சி காணக் கவின் மிகுந்து விளங்கிற்று. நீரங்காடிக்குச் சமீபத்தில் பலபல கலைப் பொருள்களை விற்கும் வாணிகர் கடைகள் அமைத்தனர்.

நீரங்காடியைச் சூழ இருந்த கடைகளில் மதுவும் கத்தூரியும் மண்கலன்களும் உடை வகைகளும் விற்கப் பெற்றன.