பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காரணம். சில ஆண்டுகளுக்கு முன்பு யான் இலங்கை வார இதழ் ஒன்றில் இக்காப்பியக் கதையை உரைநடையில் எழுதி வந்தேன். இப்போது உரிய மாறுதல்களுடன் அதுவே, ‘வெற்றி முழக்க’மாக வெளிவருகிறது.

இக்கதையின் தலைவன் உதயணனும் அவன் மகனாகிய நரவாணதத்தனும் தங்கள் வாழ்க்கையின் இறுதி நாள்களிலே போர்க்களங்களையும், எதிரிகளையும் வென்று வாகை சூடியதை மட்டும் வெற்றியாகக் கருதவில்லை. ஆனால், ஒரு காலத்தில் அந்த வெற்றிகள்தாம் ஓர் அரசனுடைய வாழ்க்கைக்குத் தேவையுள்ள மெய்யான வெற்றி என்று அவர்களும் எண்ணினார்கள்.

உலக வாழ்க்கையில் பற்றுகள் குறைந்து, மனத்தையும் ஆசைகளையும் வெற்றி கொள்ளுவதுதான் மெய்யான வெற்றி என்று அவர்கள் இந்தக் காப்பியத்தின் இறுதியில் உணர்வதாக வருகிறது. இந்த இரண்டு வகை நோக்கிலும் இந்நூலுக்கு, ‘வெற்றி முழக்கம்’ என்று பேர் வைத்தது பொருத்தமானதுதான். மூன்றாவதாக இந்தக் கதையில் வரும் அரசியல் வல்லுநனாகிய யூகி, எல்லாப் பிரச்சினைகளையும் மனத்தினாலேயே வென்று நிற்கிறான் என்பதும் ஒன்று.

மிகப் பழைய காப்பியக் கதை ஒன்றினை உரைநடையில் வழங்கினோம் என்ற பெருமை, அல்லது பணிக்காக உழைக்க வாய்ப்புக் கிடைத்ததுதான் இதை எழுதியதனால் எனக்கு உண்டான பயன்.

சுவை நிறைந்த இக் காப்பியக் கதையை வாசிக்கும் பயன் பெறுகிறவர்களுக்கு வணக்கமும் அன்பும் செலுத்தி விடைபெறுகிறேன்.

- நா. பார்த்தசாரதி

சென்னை.

20. 12. 1961