பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121

பயிற்சி தரும் குருவை, சந்தைத் தரகராக நினைக்கிறார்களே தவிர, தனது எதிர்காலத்தை உருவாக்கித் தரும் இணையற்ற ஆசான் என்று நினைக்கும் எண்ணமே இங்கு யாருக்கும் வரவில்லை.

தன்னை விட்டால் இங்கே ஆளில்லை என்ற மண்டைக் கனம். இதை ஒரு பொழுது போக்காக எண்ணும் புறம்போக்கு நினைப்பு. வாலிப கால சேஷ்டைக்கு வழிகாட்டும் கவர்ச்சியாக விளையாட்டைக் கருதும் இரண்டுங்கெட்டான் எண்ணம். ‘பேரும் புகழும் கிடைக்கிறதே அது போதும்’ என்ற அழுக்குக் கௌரவம், இப்படி மேனா மினுக்கிகளாக மேய்கின்ற ஆட்களே நம் நாட்டில் அதிகம் பேர் இருக்கின்றார்களே தவிர, இலட்சிய நோக்கத்தோடு, இந்த நாட்டின் பெருமையை உயர்த்துவோம் என்ற தாய் நாட்டுப் பற்றுள்ளவர்கள் எத்தனைபேர் இங்கே விளையாட்டில் இருக்கின்றார்கள்? உழைக்கின்றார்கள்?

இதை செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று தான் பார்க்கின்றார்களே ஒழிய, இதனால் நமது திறமை எவ்வளவு உயரும்! எந்த அளவுக்கு நமது நாட்டின் மதிப்பு வெளிநாடுகளில் பரவும்? என்று யார் நினைக்கின்றார்கள்?

இந்த நாட்டுப்பற்றைக் குழந்தைப் பருவத்திலேயே பள்ளிகளில் வீடுகளில் நாம் ஊட்டத் தவறியிருக்கிறோம். மேடையிலே இது பேசப்படும் தலைப்பாகப் போனதே தவிர, மக்கள் நெஞ்சிலே வீற்றிருக்கும் வகையில் உணர்த்தத் தவறி விட்டோம்.

அந்த இழப்பு தான். எல்லா வகையிலும் இந்த நாட்டைக் கீழாக இழுத்துக் கொண்டு போகின்றன.

‘இஷ்டம் போல் வாழும் இடத்திற்குப் பெயர் தான் இந்தியா’ என்று வெளிநாட்டார் கேலி பண்ணும் அளவில் இங்கே மக்கள் வாழ்கின்றார்கள்.

ஆ-8