பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 99

மெய்யப்பனைப் பார்த்தான். அவன் பார்த்த திசையில் கண்விட்டு, மேஜைக்குக் கீழே உறவாடிய கைகளைப் பார்த்தான். மெய்யப்பனின் மனோநிலையை, அவனைவிட இரண்டு ஆண்டுகள் பிந்திப் பிறந்த, முனுசாமியால் புரிய முடிந்தது. கன்னங்கரிய உடம்பில் உள்ளமே வெள்ளைக் கண்களாய் வந்திருப்பதுபோல் மெய்யப்பனைப் பார்த்தான். அருகே வந்தான். ஆறுதலாகப் பேசினான்.

"கவலைப்படாதே... தலைவரே... ஒன் நல்ல மனசுக்கு ஒண்ணும் வராது... ஒனக்கு சீக்கிரமாய் குணமாயிடும். பாபர் மாதிரி... முடியுமானால், ஒன் நோயை நான், வாங்கிக்க தயாராய் இருக்கேன். சத்தியமாய் சொல்றேன்... நம்பு..." என்றான்.

மெய்யப்பன் என்புருகிப் போனான். எவ்வளவு பெரிய வார்த்தைகள்... இவன் எவ்வளவு பெரிய மனுஷன்... அந்த விமலா? "பாருடி. எனக்கும் ஆளில்லாமல் போகல... நானும் அன்பில்லாமல் வாடல..."

விமலாவை நினைத்ததால் மீண்டும் அவளைப் பார்த்தவன், மேஜைக்குக் கீழே அவள் கை இப்போது ரவியின் கையை வருடிக் கொண்டிருப்பதையும் பார்த்தான். ஆங்காரத்தோடு எழுந்தான். முனுசாமியின் கைகளைத் தன் தோளில் போட்டுக்கொண்டு, அக்கம் பக்கம் கேட்கும்படிக் கத்தினான்.

"முனுசாமி... நீதான் நிஜமான மனுஷன்... இந்த ஆபீஸ்ல பட்டப் பகலுலயே தேவடியாத்தனம் நடக்கும்போது, நீ ஒருத்தன்தான் கறைபடாமல் இருக்கே... நீ ஒருத்தன் போதுண்டா, எனக்கு... மத்தவங்கெல்லாம் தூசுடா..."

ரவி, திடுக்கிட்டு, விமலாவின் கையை உதறிவிட்டபடி, 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பதுபோல், நாற்காலியைத் தள்ளிப் போட்டுக்கொண்டு, எழுந்து, மெய்யப்பனைப் பயத்தோடு பார்த்தான். விமலாவுக்கு முகம்