பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 105

'ரகளை' பண்ணாமல் என்கிட்ட வந்து ரிப்போர்ட் செய்திருக்கணும். மெய்யப்பன்...! இனிமேல் இப்படி நடந்துக் கிட்டே தொலைச்சுப்புடுவேன். நீங்கெல்லாம் சகாக்கள்... ஆபீஸ்லதான் பெரும்பகுதி நேரத்தை கழிக்கிறோம். சுமுக உறவு இல்லன்னா... நரக வேதனை யாயிடும். மிஸ்டர் பாஷ்யம்! வம்பு, சண்டையாய் மாறதுக்கு முன்பே நீங்க தடுக்கப்படாதா? நீங்க நினைச்சால் முடியாதா? சொல்லுங்க...? ஆல் ரைட்....இத்தோடு விட்டுடறேன்.‌‌.. இனிமேல் இப்படி நடந்தால், நான் வேற ஆளாய் இருப்பேன்... நாமெல்லாம் ஒரே ஃபேமலி.. வாணி, நீ உள்ளே வா... பர்சேஸ் டிக்டேஷனை கொடுத்துடுறேன்..."

மானேஜர் உள்ளே போய்விட்டார். ஊழியர்கள் கூடிக்கூடிப் பேசினார்கள். மெய்யப்பன் சிறிது நிமிர்ந்து உட்கார்ந்தான். திடீரென்று அந்தப் பக்கம் போன முனுசாமியைப் பார்த்து, எழுந்து, அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, கூப்பாடு போட்டான். "முனுசாமி... முனுசாமி... நீ... பிறத்தியாருக்கு பியூன். ஆனால், எனக்கு தம்பிடா... கூடப் பிறக்காத சதோதரண்டா... நான் இன்னும் உயிரோட இருக்கணுமா... சொல்லு... என்னால எத்தனை பேருக்கு சிரமம்." என்று அரற்றினான். ஏங்கி ஏங்கி அழுதான்.

முனுசாமி, மெய்யப்பனின் தோளைத் தட்டிக் கொடுத்தான். வாணி, பல்லைக் கடித்து கண்ணீர் சொட்டுக்களை விழிகளிலே தேக்கி வைத்தாள். மனிதர்களுக்கு எப்போதாவது மனச்சாட்சி வேலை செய்யும் என்பதுபோல், அத்தனைபேரும் அழுவதுபோல் நின்றார்கள். விமலாகூட அழுதாள். எதற்காகவோ?

மஞ்சள் வெயில் விழுந்தது. எல்லோரும் போய் விட்டார்கள். முனுசாமி, மெய்யப்பனைக் கூப்பிட்டுப் பார்த்தான். அவன் மறுத்துவிட்டு, மீண்டும் நாற்காலியில் விழுந்தான்.