பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம்

119


வேண்டும்... முடியுமா? முடியுமா... முடியாதா என்பதல்ல கேள்வி... முடித்தாக வேண்டும்.

மெய்யப்பன், 'டிராவில்' வைத்த ரசீதுகளை வெளியே எடுத்தபோது, மானேஜர் ஏகத்தாளமாக அங்கே வந்தார். அவரின் இடுப்பின் இரண்டு பக்கமும் கைகள் அம்புக்குறி போல் பிணைந்து நின்றன. "ஏனய்யா... மெய்யப்பா... ஒனக்கு என்னய்யா... கேடு...”

மெய்யப்பன், கேடு பிடித்தவன்போல், அவரை ஏறிட்டுப் பார்த்தான். மானேஜர் கோபத்தோடு கத்தினார்."நீ... ஆபீஸ்லதான்... பித்துக்குளித்தனமாய் நடக்கிற.,. சகிச்சுக் கிட்டோம்... குடித்தனம் இருக்கிறவன் சகிப்பானா? எதுக்குய்யா... ராத்திரியில...அதுவும் எல்லோரும் தூங்கின பிறகு, பக்கத்து வீட்டுக்காரன் தங்கையைக் கூப்புடுறே...? சத்யா, சத்யான்னு கத்துனியாமே... ஒன் தங்கையைக் கூப்பிட்டால் சகிப்பியா... ஒன் பெண்டாட்டியைக் கூப்பிட்டால் சகிப்பியா..."

அலுவலக ஊழியர்கள் அனைவரும், மானேஜரின் வாயையே பார்த்தார்கள். பாஷ்யம் "லோகத்துல... இப்டியும் மனுஷாளா..." என்று அலுத்துக் கொண்டார். மானேஜர் எல்லோரையும் கம்பீரமாய் பார்த்துக் கொண்டே பேசினார்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னால வந்துட்டு ஒருவர் போனாரில்ல... அவருடைய துரதிருஷ்டம், இந்த மகாராஜாவோட இருப்பிடத்தில் இருக்கிறாராம். அவருக்கு ஒரு தங்கை வாழா வெட்டியாய் இருக்குதாம்... இந்த மைனர் நேற்று நைட்ல... அதுவும் பன்னிரெண்டு மணிக்கு... சத்யா... சத்யா...ன்னு கூப்புடுறாராம். இப்போ சொல்லுங்க. இவரு பைத்தியமா... இல்ல நம்மை பைத்தியமாய் ஆக்குறவரா? அந்த ஆள்... கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டுப் போறான்... நான் ஆக்ஷன் எடுக்காட்டால், போலீஸுக்குப் போகப் போறானாம். பார்த்திங்களா. நம்ம ஆளோட வேலையை..."