பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

வெளிச்சத்தை நோக்கி...

என்று தெரியவில்லை. அநேகமாக ஒன்றிரண்டில் முடிந்து விடலாம். மினுமினுப்பான உடையோடு, பளபளப்பான பூட்ஸ்களோடு அவன் புறப்பட்டபோது, சத்யாவின் அண்ணி, 'ஒரு சொல் சொன்னாலும்... அதை நிறைவேற்றிக் காட்டுறவன்தான் மனுஷன்... காலி பண்ணுறானாம் காலி...' என்று கடைசி வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்தாள். அவளுக்கு, அவன் போகவேண்டும் என்பதைவிட, அந்த அறை அவளுக்கு வேண்டுமென்பதே இப்போது முக்கியம். குழந்தை குட்டிகளோடும், இந்த 'நொண்டி முண்டை'யாலும் கணவனைத் தனியாகப் 'பார்க்க' முடிவதில்லை.

காம்பவுண்ட் கதவைத் திறக்கப்போன மெய்யப்பன், ஜன்னலுக்கு உள்ளே நின்று பேசிய அண்ணிக்காரியை பார்த்து நடந்தான். அவள், பயந்தவள்போல், ஒதுங்கியபோது, "நான் சொன்ன சொல்... இப்போதான் ஞாபகம் வருதும்மா... எப்படியோ ஏதோ ஒரு நிலையிலே இருந்துட்டேன்... இப்பதான் மீண்டு வாரேன்... நிச்சயமாய் அடுத்தமாசம் காலி பண்ணிடுவேன்... முடியுமானால், நூறு ரூபாய்ல... நீங்களும் எனக்காக ஒரு ரூம் பாருங்க. நீங்க பார்த்தாலும், பார்க்காட்டாலும் காலி பண்ணிடுவேன்... என்னை நம்புங்க... என்னால யாருக்கும் சிரமம் வரப்படாது..." என்றான்.

அ வ ள் மு க த் தை த் தி ரு ப் பி க் காெ ண் டா ள் . மெய்யப்பனுக்கும், லேசான அதிர்ச்சி. அதே சமயம் அந்த இடத்தைக் காலி செய்யவேண்டும் என்ற உறுதி காலி செய்ய வேண்டியதிருக்கிறதே என்ற கலக்கம். சத்யாவின் நன்மையை உத்தேசித்து இடத்தை மாற்றித்தான் ஆகவேண்டும் என்ற வேதனை கலந்த உள்ளம், இடறுவது போல் இருந்தது. டிரான்குலைசர் மாத்திரை ஒன்றைப் போட்டுக் கொள்வதற்காக மீண்டும் அறைக் கதவைத் திறந்தான். மாத்திரையைக் கையில் வைத்துக் கொண்டே கட்டிலில் உட்கார்ந்தான். பிறகு, அதை உள்ளே தள்ளிவிட்டு, வெளியே வந்தான். காம்பவுண்ட் கேட்டைத் திறக்கும்போது, சத்யாவின் அண்ணி நாயர் கடைப்பக்கம் போவது போலிருந்தது. அவனுக்கு அறை பார்க்கவா?