பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 வெளிச்சத்தை நோக்கி...

கண்ணோக்கினால் போதும்... வாய்ச்சொல் கூட தேவையில்லன்னு' நினைக்கிற பல அப்பாவிங்க இருப்பாங்க... இன்னும் சாகாமல் நாட்ல இருக்காங்க... தயவு செய்து அவங்ககிட்டயும் ஒங்க சகோதர பாசத்தைக் காட்டிடாதீங்க... நீங்க போகலாம்..."

'நீ என்ன போகச் சொல்றது' என்பதுபோல், விமலா, மீண்டும் தன் மேஜைக்கு வந்து, டிராயரை இழுத்துப் பார்த்துவிட்டு, தோளை ஆட்டிக் கொண்டே, நடந்து மறைந்தாள்.

மெய்யப்பன் ஸ்தம்பித்து நின்றான். புறமுதுகு காட்டிச் செல்பவளால் புறக்கணிக்கப்பட்டோம் என்ற வாதை, ஏமாற்றப்பட்டோம் என்ற ஆத்திரம்; எள்ளி நகையாடப் பட்டோம் என்ற ஆவேசம். துன்பமின்றி, இன்பமறியாத தன் வாழ்க்கையில், தூய்மையான உறவாகப் போற்றிக் காக்கப்பட்ட பேருணர்வு பெயரில்லாமல் அழிந்ததில், அழியப்போவது போல் அவன் உடம்பெங்கும் ஆடியது. கண்கள் எரிந்தன. நெற்றிப் பொட்டுக்கள் தெறித்தன. என்ன செய்வது என்று புரியாமல் - எங்கே இருக்கிறோம் என்பது தெரியாமல் அவன் தவித்துக் கொண்டிருந்தபோது_

மானேஜர் அறையில் இருந்து வாணி வெளியே வந்தாள்.

மெய்யப்பனைப் பார்த்ததும், அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. 'அக்கா அக்கா' என்று வாஞ்சையோடு பழகும் அவனைப் பார்த்த கண்கள் நீர் சொரிந்தன. அடங்கிப் போனவள் போல், வெளியே வந்தவள், அவனைப் பார்த்ததும், அடங்க முடியாமல் அழுதாள். இரண்டு கைகளையும் மேஜையில் ஊன்றிக்கொண்டு விம்மினாள். கண்களே திரவமாகிச் சொட்டுச் சொட்டாய் விழுவதுபோல், நீர்த்துளிகள் மேஜையில் விழுந்தன. மெய்யப்பனின் அன்பான ஆறுதலை எதிர்நோக்கி நிற்பவள்போல், அவள் விம்மலுடன் அழுது, அவனை ஏக்கத்தோடு பார்த்தாள். ஆனால், மெய்யப்பனுக்கு அவள் வித்தியாசமாக நின்றாள் என்றுதான் தெரிந்ததே தவிர, ஏன்,