பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 வெளிச்சத்தை நோக்கி...

அந்த மெலிந்த இருட்டிலும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. இதற்குமேல் போக வேண்டியதில்லை என்பதுபோல், கால்களை மாற்றிப் போடப் போனான். இவ்வளவு தெரிந்தது போதும் என்பதுபோல், கண்களை மூடிப் பார்த்தான். ஆனால், அவனுக்கே புரியாத ஒரு ஆவேசம் அவனைக் கடல் மண்ணைப் பார்த்துத் தள்ளிவிட்டது. வேகமாக நடந்தான். அவர்களைப் பின்தொடர்வது கேவலமான காரியம் என்று நினைத்து, சிறிது நிதானித்தான். அதேசமயம், இதற்கு மேல் கேவலம் இல்லை என்பதுபோல், கேவலப்பட்டவன் போலவே நடந்தான். விமலாவின் பிடியில் சிக்கிய ஒரு அப்பாவியை மீட்கவேண்டும் என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு, ஏமாற்றப்பட்ட ஆவேசத்தில், கால்களைத் தூக்கிப்போட்டு, கைகளால் அவற்றைப் பிடிப்பவன்போல் நடந்தான்.

விமலாவும், அவளது 'உள்ளங்கவர் கள்வனும்' ஒரு படகுக்கு முன்பக்கமாகப் போய் உட்கார்ந்தபோது, மெய்யப்பன் பின்பக்கமாக உட்கார்ந்து படகோடு படகாக தன்னைக் குறுக்கிக் கொண்டான். சீ... இப்படியா நாம் நடந்து கொள்வது என்பது போல் அதட்டிய மூளையை அடக்குகிறவன்போல் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொண்டான். இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்பதுபோல் பேசிய மனதைத் தட்டிக் கொடுப்பவன் போல், வலது கையை விரித்து, மார்பை அழுத்திக் கொண்டான். படகிற்கு அந்தப் பக்கம் பல்வேறு அரவணைப்புச் சத்தங்களுக்குப் பிறகு, வாய்ச் சத்தம் வார்த்தைகளாகக் கேட்டது.

"விமல்... நான் ஒன்னை ஒண்ணு கேட்பேன்... தப்பாய் நினைக்க மாட்டியே..."

"என்ன டார்லிங்... நீங்க இப்படி பூடகமாய் பேசுறதைத் தான் தப்பாய் நினைக்கத் தோணுது என்றைக்கும் ஒளிவு மறைவு இல்லாம பேசணும்... இதயமும் உண்மையும் இரும்பும் காந்தமும் மாதிரி இயங்கணும்... மனசை மூடி மூடி வச்சால் அது அழுகிப்போயிடும்."