பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை


நாடறிந்த நல்லதோர் எழுத்தாளர் திரு. க. சமுத்திரம் அவர்கள். இலக்கியத்தைப் பொழுதுபோக்குச் சாதனமாக மலினப்படுத்தி எழுதி வருகின்ற எழுத்தாளர்களின் பாணியிலிருந்து முற்றிலும் விலகி, திட்டவட்டமான, ஆரோக்கியமான குறிக்கோளுடன் எழுதி வருபவர் திரு. சு. சமுத்திரம். அதே சமயம், மலைப்பிரசங்கம் போல், உபதேச நடையில் வாசகர்களை மிரட்டாமல் எப்படி வாழ்ந்தால் நல்லது என்பதை அவர் இதமான குரலில், தோழமை உணர்வுடன் விளக்குகிறார்.

"வெளிச்சத்தை நோக்கி." என்னும் இந்நாவலின் பெயரே திரு. சமுத்திரத்தின் ஆக்கப்பூர்வமான கண்ணோட்டத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது. மனவியலும் சமூகவியலும் பின்னிப் பிணைந்து உருவாகியுள்ள இந்நாவல் டாக்டர். மு.வ. அவர்களின் இலக்கியப் பரம்பரையில் புதிய தடம் பதிக்கிறது. மு.வ. அவர்களின் மேற்கோள் ஒன்று இந்நாவலில் தரப்படுவதும், குணநலன்களுக்கு ஏற்றபடிக் கதாநாயகனுக்கு மெய்யப்பன் என்று பெயர் சூட்டப்படுவதும் கவனிக்கத்தக்கவை.

மெய்யப்பனைப் போலவே எண்ணற்ற இளைஞர்கள் பளிங்கு போன்ற இதயத்துடனும் லட்சிய வேட்கையுடனும் அலுவலகங்களில் பணிபுரியச் சேர்கின்றனர். ஆனால், அலுவலகச் சூழ்நிலையும் சமூகத்தின் சீர்கேடுகளும் அவர்களுடைய லட்சியங்களையெல்லாம் நசுக்கிவிடுகின்றன. ஆகவே பெரும்பான்மையான இளைஞர்கள் காலப்போக்கில் சூழ்நிலையோடு சமரசம் செய்துகொண்டு, செக்கு மாட்டு வாழ்க்கையில் ஆயுளைக் கழித்து விடுகின்றனர்.

'ஆனால் சூழ்நிலை எதிர்ப்பாக இருந்தாலும் எப்போதும் நன்மையே செய்வேன்; தீமைக்கு விலை போகமாட்டேன்' என்று கங்கணம் கட்டிக்கொண்டு போராடுகின்ற சிறுபான்மை