பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 83

"போடா கழுதை... அற்ப விஷயத்தை ஆயுளுக்கும் நினைக்கிறவன் நீ என்னையும் உன்கூட சேர்ந்து ஒப்பாரி வைக்கச் சொல்றியா... வேணுமுன்னால் ஒண்ணு பண்ணு.. பேசாமல்... என்கூட ரெண்டு மாசம் ஊர்ல வந்து தங்கு... ஒன்னை ராஜா மாதிரி கவனிக்கிறேன்... ஒனக்கும் ஒரு சேஞ்ஜ் வேணும்."

"நேற்று நைட்ல இருந்து... நான் சேஞ்ஜ் ஆயிட்டேண்டா..."

"மண்ணாங்கட்டி.... சும்மா மனக் கிலேசம்... ஆபீஸுக்குப் போனால் சரியாகிவிடும்... எதுக்கும் சாயங்காலமாய் டாக்டரைப் பாரு... அவரைப் பார்க்காட்டாலும் ஒண்னும் ஆயிடாது... அப்போ, நான் வரட்டுமா..?"

மெய்யப்பன் அவன் போகலாம் என்பதுபோல் தாராளமாகத் தலையாட்டினான். குமாரே அவனைக் கடித்து, ரத்தத்தைக் குடித்து, குதறுவது போன்ற ஒரு பயம். வழியனுப்புவதுபோல் எழுந்து நின்றான்.

குமார் அவன் தோளில் தன் கரங்களைக் குவித்துக் கொண்டே பேசினான். "இதோ பாருடா... இனிமேலாவது உருப்படியாய் இரு நீ நல்லவனாவே இரு... அதே மாதிரி எல்லோரும் நல்லவங்களாய் இருப்பாங்கன்னு நினைக்காதே... இருக்கணுமுன்னு எதிர் பார்க்காதே... மனிதர்களை அவர்களது மனவோட்டத்துக்குத் தக்கபடி எடை போடணுமே தவிர, நம்முடைய மனோநிலைக்குத் தக்கபடி கணிக்கக்கூடாது. உலகத்தில் முக்கால்வாசிப் பேர் நல்லவர்களுமில்ல... கெட்டவர்களுமில்ல... ஏசுநாதரை காட்டிக் கொடுத்தவன் ஒரு சிஷ்யன்தான். அதனால, வம்புச் சண்டைக்குப் போகாதே... வந்த சண்டையை விடாதே.... ஆனானப்பட்ட விஷ்ணுவே... அயோக்கியர்களை அழிக்க பலதடவை அவதாரம் செய்தாராம்.... நீ எம்மாத்திரம்? கடைசியில நீதான் அவதாரமாய் போயிடுவே... அதனால பிறரைக் காப்பாத்தனும் என்கிற எண்ணத்தை விட்டுவிட்டு, ஒன்னைக் காப்பாத்திக்கப் பாரு."