பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்



தொங்கிய சுரைக்காய் முற்றித்
தொட்டுலர்ந் திடவே கொய்து
முங்கியே யதனை நீரில்
மூழ்க்கிட முயலு கின்றேன்.

தங்கிநில் லாமல் மேலே
தாவிடு மிதனைக் காணிர் !
இங்குயி ரியல்பிஃ தாயின்
எங்கன மெளியோர் தாழ்வர்?
எங்களின் உரிமை வாழ்வை
எய்தியே தீர்வோம்; ஏற்பச்
சங்கமு முண்டு : “ வெல்லும்
சத்தியம் சகத்தி" லென்பர் !

பங்கிடார்; பரிவு மில்லார்;
பணப்பலம் கொண்டு பண்ணும்
கங்குலின் மிரட்டல், நீதிக்
கரைகடந் தலைக்கு மேனும்,
தங்கிடா துலகில் நாளைச்
சமதர்மம் தழைத்துச் சாரும்
செங்கதி ரெனவே தோன்றிச்
சிறுகாலை செய்யும்' என்றான்

அங்கந்த வேளை நன்னீர்
ஆடிடும் நிமித்த மாகத்
தங்கமே போலும் மேனித்
தளதளப் புடனே, தாயாம்
மங்கையு மொருத்தி வந்தாள் !
மானாபிமானத் தோடும்
இங்கினி யிருக்க வேண்டாம்
எனவெழுந் தேகி னேனே!

104