பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்

அறியவுள்ளவை

காலம் கழியநமைக் காத்துக் கொண்டுள்ளவைதாம்
ஞாலம்நீர், தீ, காற்று நான்கினோடு - நீல நிற
வானமென ஐந்துண்டு, வாழ்வுக் கடிப்படையாம்,
ஞானியறி வித்தான் நமக்கு

உடல்மண்ணீ ராகி உயிர்நீர்தீ காற்றாய்
உடல், வாய், கண், மூக்குசெவி யோரும் - மிடலாய்
மனம் வாக்கு காயமென மன்னுமிம் மூன்றின்
கனம் காக்கும் வாழ்வில் கலந்து.

தன்னை யறிந்தோன் தலைவனெனும் தக்கோர் சொல்
உன்னை யறிந்துநீ உய்வது தான் - என்னை
உடல்காத் துயிர்காத் துளங்காத் தொழுகி
இடல்காத் திசைகாத் திருந்து

ஏற்றுண்டு வாழாம லிட்டுண்டு வாழுவதே
ஆற்றத் தகுந்த அறமென்பர் - சாற்றின்
போற்றுகிற தெய்வம் புனிதவுளத் துள்ளதெனும்
நோற்றறிந்து கொள்ளெனும் நூல்

வாழப் பிறந்தவன் வாழ்வை யறியாமல்
தாமும் தவறுகளேத் தான்செய்தால் - கூழுக்
குழைத்துக் கிழமா யுடலிலுயிர் போகும்,
இழைத்ததுவே றின்றி யிருந்து

விதைத்ததே பிந்தி விளைந்ததென் றெண்ணார்
சிதைத்துத்தம் சிந்தை கலங்கிப் - பதைத்தழுது
கண்ணீராய்ப் பெய்வார், கதறுவார், காதடைக்க
மண்ணீரம் செய்வார் மடிந்து.

118