பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

வேங்கடம் முதல் குமரி வரை

வேண்டுகிறாள். ஆம்! உத்தரவு ஹோம் கவர்ன் மென்டிலிருந்தல்லவா பிறந்திருக்கிறது. சுந்தரர் ஒப்புக் கொள்ளாமல் இருப்பாரா? சுந்தரர் ஒப்புக்கொண்டு விட்டார் என்றால் இறைவனும் சரி என்று சொல்வதைத் தவிர வேறு ஏதாவது ஆக்ஷேபணை கிளப்பக் கூடுமா? சுந்தரரிடம், 'சரி வருகிறேன், உன் நண்பனை மிக்க கவனத்துடன் யாகத்தை நடத்தச் சொல்லு' என்று சொல்லி விடுகிறார். யாகம் நடக்கிறது விமரிசையாக.

தியாகேசர் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேள்விக் கூடத்துக்கு வருகிறார். நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக்கிப் பிடித்துக் கொள்கிறார். தம்பட்டம், மதுக்குடம், மாட்டு இறைச்சி எல்லாவற்றையும் சுமந்து கொண்டு வந்து சேர்கிறார். யாகத்தை நடத்திக் கொண்டிருந்த பிராமணர்களோ, 'அடே சண்டாளனான பறையன் இங்கு வரலாமா? போ, ஒதுங்கிப் போ' என்று விரட்டுகிறார்கள், பறையன் வந்ததால் யாகமே கெட்டு விட்டது என்று சொல்லி ஓடிப் போய் விடுகிறார்கள். ஆனால் சோமாசிமாறருக்கு மட்டும் விஷயம் விளங்குகிறது. தம் மனைவியுடன் வந்த பறைத் தம்பதிகளை எதிர் கொண்டழைத்து உபசரித்து அவிர்ப்பாகம் கொடுக்கிறார். உடனே இறைவன் தாம் எடுத்து வந்த பறை உருவைக் களைந்து விட்டு ரிஷபாரூடராய்க் காட்சி கொடுத்து மறைகிறார். தம்மை வெறுத்து ஒதுக்கிய பிராமணர்களைச் சண்டாளர்களாகப் போகும்படி சபிக்கிறார். அவர்கள் இறைவன் அடிவீழ்ந்து சாப விமோசனம் வேண்ட அவர்களையும் அவர்கள் சந்ததிகளையும் தினமும் மத்தியானம் ஒரு மணி நேரம் நீசத்வம் அடையவும், மற்ற வேளைகளில் புனிதர்களாக வாழவும் அனுக்கிரகிக்கிறார். இவ்வளவும் உண்மையாக நடந்ததோ இல்லையோ? கதை என்றாலும் மிக்க சுவையுடைய கதை. இறைவன் தன் பக்தர்களை ஆட்கொள்ள எந்த நேரத்திலும், எந்த உருவத்திலும் வருவான், வரத் தவறான் என்ற உண்மையை அல்லவா உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறது. (எனக்கு