பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

பூஜித்திருக்கிறான். ஒன்றுக்கு மூன்றாகத் திருமணம் நடந்திருக்கிறதே இந்த வட்டாரத்தில், மன்மதன் பூஜியாமல் இருப்பானா? இங்கும் இறைவன் மணக்கோலத்திலேயே இருக்கிறார்.

இத்தலத்தில் மணக் கோலம் கொண்டதற்குக் கதை இதுதான்: வைசிய குலத்திலே இரண்டு பெண்கள். ஒருத்தி மற்றொருத்திக்கு நாத்தி, இவர்கள் இருவரும் ஒருங்கே கருப்பமுறுகிறார்கள். அப்போது தமக்குப் பிறக்கும் குழந்தைகளை ஒருவருக் கொருவர் சம்பந்தம் செய்து கொள்வது என்று பேசிக்கொள்கிறார்கள். ஒருத்தி பெண்ணைப் பெறுகிறாள். மற்றொருத்தி யோ ஆமை போன்ற மகனைப் பெற்றெடுக்கிறாள். அதனால் பின்னர் பெண்பெற்றவள் ஆமைக்குமரனுக்குப் பெண் கொடுக்க மறுக்கிறாள். ஆமைக் குமரனோ பெருமானைப் பூஜிக்கிறான். ஆமை உரு நீங்கிக் குறித்த பெண்ணை மணக்கிறான். இந்த மணத்தையும் முடித்துவைத்த காரணத் தால் இங்குமே மணக்கோலத்தில் எழுந்தருளி விடுகிறார். இக்கோயிலிலுமே மணக்கோலநாதர் செப்புப்படிமம் அழகு வாய்ந்தது. இங்கு நல்ல செப்புச்சிலைகள் பல இருக்கின்றன. நடராஜர் இருக்கிறார். வீரசக்தி அம்மனும் இருக்கிறாள் தன் தோழியருடன். இந்தச் சொன்னவாறு அறிவார் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதோடு, சொல்லாத சொல்லையும் அல்லவாகாப்பாற்றுகிறார். தான்தான் சொன்ன சொல்லைக் காப்பாற்ற நறுஞ்சாந்து இளமுலையைக் கல்யாணம் செய்து கொள்கிறார். அத்துடன் வேறு இரண்டு திருமணங்களையும் நடத்தி வைத்து மகிழ்கிறார். ஆதலால் திருமணம் விரும்பும் வாலிபர் - பெண்கள் எல்லாம் இத்தலங்களுக்குச் செல்லலாம். அதன்பயனாக விரைவிலேயே திருமணம் நடக்க அருள் பெறலாம். ஆம்! சொன்னவாறு அறிவார்தான் ஒரு 'மாட்ரிமோனியல் பீரோ' வே நடத்துகிறவர் ஆயிற்றே!