பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

253

கங்கை கொண்ட சோழபுரம், திருச்சிராப்பள்ளியில் உடையார்பாளையம் தாலுகாவில் இருக்கிறது. அரியலூர் ஸ்டேஷனில் இறங்கி ஜயங்கொண்ட சோழபுரம் சென்று பின்னும் செல்லவேண்டும். இப்பாதை முப்பது மைல் தொலைவுக்குமேல் இருக்கும். இதைவிட நல்லவழி கும்பகோணத்திலிருந்து கல்லணை என்னும் 'லோயர் அணைக்கட்டு' பதினாறு மைல் தொலைவில் இருக்கிறது. அங்கிருந்து சென்னை செல்லும் ரோட்டில் நான்கு மைல் போய், அங்கிருந்து ஜயங்கொண்ட சோழபுரம் கிளைச்சாலையில் திரும்பவேண்டும். திரும்பி ஒரு மைல் சென்றால் இக்கோயில் இருக்கும் இடம் வந்து சேரலாம். கொள்ளிடத்தில் கட்டியுள்ள லோயர் அணைக்கட்டைக் கடந்ததுமே கோயில் விமானம் தெரியும். நல்ல பொட்டல் காட்டில் கோயில் இருப்பதால், எந்த ரோட்டில் வந்தாலும் ஏழுஎட்டு மைல் தூரத்திலேயே கோயில் விமானத்தைக் காணலாம். இந்தக் கோயில் இருக்கும் ஊர் கங்கை கொண்ட சோழபுரம் என்றும், இக்கோயில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்றும் பெயர் பெற்றிருக்கின்றன. இக்கோயிலையும் கட்டி, இந்த நகரத்தையும் நிர்மாணித்த ராஜேந்திரசோழனை, கங்கைகொண்ட சோழன் என்று சரித்திரம் கூறுகிறது. கோயில் வாயில் செல்வதற்கு முன்னமேயே, தலம் கோயில், அரசன் இவர்கள் வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே. தஞ்சையில் இருந்து அரசாண்டு, உலகம் புகழும் அந்தத் தஞ்சைப் பெரிய கோயிலை எடுப்பித்த ராஜராஜனைத் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

அந்த ராஜராஜனின் மகனே ராஜேந்திரன். சேரர், பாண்டியர், பல்லவர், சாளுக்கியர் எல்லோரையும் வென்றதுடன் கடல் கடந்து சென்று ஈழநாட்டையும் மும்முடிச் சோழ மண்டலமாக்கி, இன்னும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரத்தையும் கைக்கொண்டவன் ராஜராஜன். அவன்