பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

273

வரகுணபாண்டியனைப் பிரமஹத்தி தோஷம் தொடருகிறது. அது காரணமாக எத்தனையோ தொல்லைகளுக்கு உள்ளாகிறான் பாண்டியன். இந்தப் பிரமஹத்தி தோஷம் எத்தனை பரிகாரம்பண்ணியும் நீங்கவில்லை. இறை அருளில் நம்பிக்கை கொண்ட பாண்டிய மன்னன் திரு இடை மருதூர் வருகிறான். பிரமஹத்தியும் தொடர்கிறது. ஆனால் கோயில் கீழவாயிலில் நுழைந்து மகாமண்டபத்தைக் கடந்ததும், பிரமஹத்தியால் தொடர்ந்து செல்லமுடிய வில்லை. 'சரி உள்ளே சென்ற பாண்டியன் திரும்ப இப்படித்தானே வருவான்? வரும்போது அவனைத்தொடர்ந்து செல்லலாம்' என்று அக்கோயில் வாயிலிலேயே நின்றுவிடுகிறது. வரகுண பாண்டியனோ தோஷம் தன்னை விட்டு நீங்கிவிட்டது என்று அறிந்ததும், மகாலிங்கப் பெருமானை வணங்கி மேலக் கோபுரவாயில் வழியாகவே ஊர் திரும்பிவிடுகிறான். இந்தச் செய்தி பாண்டியன் பிரமஹத்தியைப்பற்றி. இதே முறையிலே சோழன் அஞ்சத்துவசனையும் பிரமஹத்தி தொடர்கிறது;அவனும் கோயிலுள் நுழைந்து இறைவனை வணங்கி மேலக் கோபுர வாயில் வழியாகத் திரும்பிவிடுகிறான்; சோழப் பிரமஹத்தி காத்தே கிடக்கிறது கீழ வாயிலில் என்றும் ஒரு வரலாறு.

எது எப்படியேனும் இருக்கட்டும், பிரமஹத்தி கீழவாயிலில் இடப்புறப் பொந்தில் இருப்பது (சிற்ப உருவில்தான்) இன்றும் கண்கூடு. அது காரணமாகவே அந்தக் கீழ வாசலில் நுழைபவர்கள் எல்லாம் இன்றும் வேறு வழியாகத்தான் வீடு திரும்புகிறார்கள். ஆம். கீழவாயில் வழியே திரும்பினால், நாம்தான் பாண்டியன் அல்லது சோழன் என்று' தொடர்ந்து விடக்கூடாதே என்று பயம். நம்மைப் பிரமஹத்திகள் தொடராது என்றாலும் வேறு எத்தனையோ ஹத்திகள், வறுமை, நோய் முதலியவை தொடரக் காத்துத்தானே கிடக்கின்றன. மகா லிங்கரை வணங்கிய பின்னும் அவை தொடரலாமா? அதற்காகவாவது நாம் கீழ வாயிலை விடுத்து வேறு வாயில்கள் வழியாக

வே.மு.கு.வ -18