பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வேங்கடம் முதல் குமரி வரை

குளம்புச் சுவட்டைத் தம் தலையிலே தாங்கி நிற்கிறார். இவரையே இராமன் இலங்கையிலிருந்து திரும்பும்போது வழிபாடு செய்திருக்கிறான். அதனால் 'இராமனும் வழிபாடு செய்யும் ஈசன் இவர்' என்பது அப்பர் திருவாக்கு. ஞானசம்பந்தர், அப்பர் இருவரையும் தவிர சுந்தரராலும் பாடப் பெற்றவர் இவர். இந்த சுந்தரர்தான் பொல்லாதவர் ஆயிற்றே. இந்த ஆமாத்தூர் அழகனிடமும் பொற்காசு பெறத் தவறவில்லை.

பொன்னவன் பொன்னவன்
பொன்னைத் தந்து என்னைப்போகவிடான்
மின்னவன் மின்னவன்
வேதத்தின் உட்பொருளாகிய
அன்னவன் அன்னவன்
ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன்
என் மனத்து இன்புற்று இருப்பவனே

என்று பாடவும் அவர் மறக்கவில்லை.

இந்த இறைவன் கோவிலுக்கு இரண்டு பிரகாரங்கள். முதல் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் இக்கோயில் கட்டிய அச்சுத தேவராயன் சிலை இருக்கிறது. இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர், இராமர், காசி விசுவநாதர், சுப்பிரமணியர் எல்லாம் தனித் தனி சந்நிதிகள். முருகன், திருமகள் எல்லாம் இத்தலத்தில் வழிபட்டு அருள் பெற்றவர் என்பது புராண வரலாறு.

இறைவனை வணங்கிய பின் 'முத்தை வென்ற முறுவலாள்' கோயிலுக்குச் செல்லலாம். இக் கோயிலுக்குத்தான் நீண்டுயர்ந்த கோபுரம். அன்னையின் திருப் பெயர் முத்தாம்பிகை. அழகிய நாயகி அவள். அதனால்தான் அழகை ஆராதித்த அந்த அருணகிரியார் 'முத்தார் நகை அழகுடையாள்' என்றே பாடி மகிழ்கிறார். அற்புத