பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

85

இடங்களிலோ தங்கிவிட்டுக் காலை ஐந்து மணிக்கே எழுந்து, ஸ்நானம் முதலியவற்றையும் முடித்துக் கொண்டு ஓட்டம் ஓட்டமாக ஆறு மணிக்குள் கோயிலுள் நுழைந்துவிட வேண்டும். கீழ்க்கோபுர வாயிலில் நுழைந்து விரைவாகப் பரந்து கிடக்கும் வெளிப் பிரகாரத்தைக் கடந்து நடராஜன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் சிற்றம்பலம் வந்து சேரவேண்டும். அங்கு நமக்கு முன்னமேயே அன்பர் பலர் வந்து காத்து நிற்பார்கள். தில்லை மூவாயிருவர் கூட்டத்தைச் சேர்ந்த அர்ச்சகர் வருகைக்காக. அப்போது மலையாளத்துச் செண்டை வாத்தியம் போன்ற ஒரு முழவு அதிரும். அந்த முழவு கொட்டும் போதே நம் கால்கள் ஆடும்; முழவின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, நம் இதயத் துடிப்பின் வேகமுமே அதிகரிக்கும்.

அச்சமயத்தில் சிற்றம்பலத்தின் பொற் கதவுகள் திறக்கப்படும். ஆரத்தி காட்டப்படும். நன்கு அலங்கரிக்கப்பட்ட நடராஜனது திருக்கோலத்தைக் கண்டு உடல் புளகாங்கிதம் அடையும், உள்ளம் குழைந்து நெகிழும்.

இந்த நடனத் திருக்கோலத்தையே ஆனந்த நடனம் என்பார்கள். இக்கோலத்தைக் கண்டு தொழுதே அன்று திருமூலர்,

ஆனந்தம் ஆடரங்கு, ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தமாக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக்கூத்து உகந்தானுக்கே

என்று பாடியிருக்கிறார். ஆனந்தம் ஆனந்தம் என்று பரவசமாக ஆடியிருக்கிறார். இந்த ஆனந்தக் கூத்தனின் திருவோலக்கக் காட்சி எப்படி இருக்கும்? கண் குளிரக் கண்டு நாமும் பரவசம் அடைந்தாலும், சொல்லத் தெரிய வேண்டாமா? சொல்லத் தெரிந்த அப்பர் சொல்கிறார்: