பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

185

இங்குள்ள லிங்கத் திருஉரு சுயம்பு மூர்த்தி. 'திருவையாறு அகலாத செம்பொற் சோதி' என்றே திருமுறைகளில் குறிக்கப்படுகிறார். புராணங்கள் இவரைக் கைலாச நாதர் பிரணதார்த்தி ஹரர் என்று போற்றுகின்றன. இத்தலத்துக்குச் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் வந்திருக்கிறார்கள்,

ஓதியாரும் அறிவார் இல்லை, ஓதி உலகெல்லாம்
சோதியாய் நிறைந்தான் கடர் சோதியுள் சோதியான்!
வேதி யாகி, விண்ணாகி மண்ணோடு எரிகாற்றுமாய்
ஆதி யாகி நின்றாளும் ஐயாறுடை ஐயனே!

என்பது சம்பந்தர் தேவாரம். சுந்தரர் தம் தோழர் சேரமான் பெருமாள் நாயனாரோடே இத்தலத்துக்கு வந்திருக்கிறார். காவிரியில் அப்போது பெரு வெள்ளம். காவிரியின் தென் கரையில் நின்று,

கங்கை சடைமேல் கரந்தானே!
கலைமான் மறியும் கனல் மழுவும்
தங்கும் திரைக் காவிரிக் கோட்டத்து
ஐயாறுடைய அடிகளோ?

என்று கூவி அழைத்திருக்கிறார். இந்த ஓலத்துக்கு எதிர் ஓலம் கொடுத்திருக்கிறார், இந்தக் கோயிலில் உள்ள விநாயகர். இவரே, ஓலமிட்ட விநாயகர் என்று இன்றும் அழைக்கப்படுகிறார். காவிரியும் வழி விட்டிருக்கிறது. அதன்பின் சுந்தரரும் சேரமானும் வந்து வணங்கித் திரும்பியிருக்கிறார்கள். நாமோ இன்று காவிரிப் பாலத்தைக் கடந்து ஓலமொன்றும் இடாமலேயே வந்து ஐயாறு அடிகளைக் கண்டு திரும்பும் வாய்ப்புப் பெறுகிறோம்.

இந்த ஐயாறப்பன் நல்ல சைவன், இவனையே மணிவாசகர், 'ஐயாறதனில் சைவனாயினன்' என்கிறார். சிவபெருமானே சைவனாவது வேடிக்கைதான். இதன் வரலாறு தெரியவேண்டாமா? இந்தக் கோயிலில் பூசை