பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

வேங்கடம் முதல் குமரி வரை

மகாவிஷ்ணு எடுத்த மோகினி அவதாரம், நடராஜர் ஆடிய ஊர்த்துவ தாண்டவம், பதஞ்சலி, வியாக்கிரபாதர், பிருங்கி ரிஷியுடன் கூடிய அர்த்தநாரி எல்லாம் நிற்பர். தெற்குப் பிரகாரத்தில்தான் இத்தலத்துக்குச் சிறப்பான ரதி, மன்மதன் சிலைகளும் மற்றச் சிலைகளும் இருக்கின்றன. ஆரம்பத்திலே சொன்ன வாலிவதக் காட்சி, ராமர் மறைந்திருந்து அம்பெய்தல் எல்லாம், சந்நிதி எதிரேயுள்ள தூண்களில் இருக்கின்றன.

இக்கோயிலில் பெரும் பகுதியைக் கட்டி இங்குள்ள சிற்பவடிவங்களை யெல்லாம் அமைத்தவர் கெட்டி முதலியாரே. அவர் சிறந்த சைவர். சொன்ன சொல் தவறாதவர், அவரைப் பற்றியும் ஒரு பாடல் வழங்குகிறது.

செங்கதிர் பன்னிரண்டு ஈசர்
பதினொன்று திக்கும் பத்து,
கங்கையும் ஒன்பது, வெற்பு எட்டு
எழுகடல், கார்த்திகை ஆறு,
ஐங்கணை, நான்மறை முச்சுடர்,
சாதியவை இரண்டே என்னும்
மங்கை வரோதயன் கெட்டி
முதலியார் வார்த்தை ஒன்றே

கெட்டி முதலியின் பெருமையை விளக்க எழுந்த பாட்டிலே, நாட்டில் உள்ள பொருள்களைப் பன்னிரண்டிலிருந்து படிப்படியாய்க் குறைத்துக் கணக்கிட்டு விடுகிறார் கவிஞர்.

மனத்தகத்தான், தலைமேலான்
வாக்கின் உள்ளான், வாயாரத்
தன் அடியே பாடும் தொண்டர்
இனத்தகத்தான், இமையவர் தம்
சிரத்தின் மேலான், ஏழண்டத்து