பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வேங்கடம் முதல் குமரி வரை

வணங்கி விட்டு வெளியே விரைவிலேயே வந்துவிடலாம். ஆம், எப்போது கீழே விழுவோம் என்று காத்து நிற்கும் மண்டபம் நம் தலைமேல் விழுந்து வைக்கக் கூடாதல்லவா? இந்தக் கோயிலைப் பார்த்து விட்டுத் திரும்பும்போது நம் உள்ளத்தை ஒன்று அழுத்தவே செய்யும். 'பண்டைப் பெருமையுடைய பழையாறைக் கோயிலிலே இண்டைச் செடி முளைத்து எழில் இழந்து நிற்பதெல்லாம் நம் கலை ஆர்வம் நலிந்ததற்குச் சான்றுதானே' என்று சொல்லவும் தோன்றும்.

இந்தப் பழையாறையைப் பார்த்த சூட்டிலேயே காலைக் கொஞ்சம் எட்டிப் போட்டுக் கிழக்கே ஒரு மைல் நடந்து நாதன் கோயில் என்று வழங்கும் நந்திபுர விண்ணகரையுமே பார்த்து விடலாம். இங்கே விண்ணகரப் பெருமாளும் சண்பக வல்லியும் கோயில் கொண்டிருக்கிறார்கள். இங்கே பெருமாளைத் திருமங்கை மன்னன் ஒரு பதிகம் பாடி மங்களாசாஸனம் செய்திருக்கிறார். இந்தப் பெருமாளையும் கண்டு தரிசித்து விட்டு மேற்கு நோக்கி விரைவாகவே வரலாம். அப்போது தானே இன்று இவ்வட்டாரத்தில் பிரபலமாக இருக்கும் பட்டீச்சுரம், சக்தி முற்றம் என்ற தலங்களைத் தரிசிக்கலாம்.

காமதேனுவின் புதல்வியர் நால்வரில் பட்டி ஒருத்தி, அவள் பூஜித்த தலம் பட்டீச்சுரம். இறைவன் பெயர் பட்டீச்சுரர். அவரைத் தேனுபுரீசர் என்றும் அழைப்பார்கள். அம்பிகை பல்வளைநாயகி, ஞானாம்பிகை என்றும் அழைக்கிறார்கள். இராவணனை வதஞ் செய்த ராமரை சாயஹத்தி பற்றிக்கொள்கிறது. அவர் இத்தலத்துக்கு வந்து பட்டீச்சுரரை வணங்கி தோஷம் நீங்கியிருக்கிறார். அவரது கோதண்டத்தால் கீறிய இடத்திலே ஒரு கிணறு. அதுவே தனுஷ்கோடி தீர்த்தம். தொலை தூரத்தில் உள்ள தனுஷ்கோடி செல்ல இயலாதவர்கள், இக்கிணற்று நீரிலே மார்கழி அமாவாசை அன்று மூழ்கி, அத் தனுஷ்கோடியிலே நீராடிய பலனைப் பெறுகிறார்கள்.