பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

அமிர்தத்தை வேறு சாப்பிட்டுவிட்டார்கள் என்றால் கேட்பானேன்? ஆதலால் பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்த உடன் தேவர்கள் அசுரர்களுக்கு பங்கைக் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். அசுரர்களோ விடுவதாக இல்லை. இந்த நிலையில் தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டிருக்கிறார்கள். விஷ்ணு மோகனமான மோகினி வடிவத்தில் வந்திருக்கிறார். இருவருக்கும் அமுதத்தைத் தாமே பங்கிட்டுத் தருவதாகச் சடறியிருக்கிறார். அப்படியே அமுதத்தைப் பரிமாறவும் முனைந்திருக்கிறார். தேவர்கள் பக்கம் வரும்போதெல்லாம் தாராளமாய் வாரி வழங்கிவிட்டு, அசுரர்கள் பக்கம் போகும்போது ஆடிப் பாடி அவர்களை மயக்கியிருக்கிறாார் அமிர்தத்தைக் கொடாமலேயே. கடைசியில் அமிர்தம் காலியாகிவிடுகிறது ஒரு துளிகூட அசுரர்கள் பெறாமலேயே. இப்படி அசுரர்களை ஏமாந்த சோனாகிரிகளாக்க எடுத்திருக்கிறார் ஒரு தடவை மோகனாவதாரம். இந்த மோகனாவதாரம் எடுத்த தலம்தான் மோகனூர். அதுவே மோகூர் என்று குறுகியிருக்கிறது. அந்தத் திருமோகூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருமோகூர், மதுரைக்கு வடக்கே ஏழு எட்டு மைல் தொலைவில் இருக்கிறது. மதுரை-மேலூர் ரோட்டில் ஒத்தக் கடைவரை நல்ல சிமெண்ட் ரோட்டில் போய் அதன்பின் கிழக்கே திரும்பி ஒரு மைல் சென்றால் திருமோகூர் போய்ச்சேரலாம். கோயிலைச் சுற்றி நாலு புறமும் வயல்களும் தடாகங்களும். 'தான் தாமரை தடம் அணிவயல் திருமோகூர்' என்றுதானே நம்மாழ்வார் இத்தலத்தைப் பாடியிருக்கிறார்; கோயிலைச் சற்றி நீண்டுயர்ந்த மதில் அழகு செய்கிறது. கோயிலுக்கு வடக்கு மதிலுக்குப் பக்கத்திலே புஷ்கரணி அதில் தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும். இதையெல்லாம் பார்த்துக் களித்த பின்னரே கோயிலுள் செல்லலாம்; கோயில் பெரிய கோயில், கிழக்கு வாயிலைத் தாண்டியதும் கம்பத்தடி மண்டபம், அங்குதான் இக்கோயிலைத் திருப்பணி செய்த சிவகெங்கைச் சீமை பாளையக்காரர்களான சின்ன மருது, பெரிய மருது இவர்களின் சிலைகள் இருக்கின்றன. பெரிய மருது கட்டிய கோபுரத்தைத்தான்

வே.முழகு.வ-8