பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

227

என்று துதிக்கிறான். இந்த மூர்த்திதான் திருச்செந்தூரில் செந்தில் ஆண்டவனாக எழுந்தருளியிருக்கிறான். நல்ல அழகொழுகும் வடிவம். விபூதி அபிஷேகம் செய்யக்கோயில் நிர்வாகிகள் மூன்று ரூபாய்தான் கட்டணம் விதிக்கிறார்கள். 'விபூதிக் காட்பிட்டுக் கண் குளிரக் கண்டால் நம் வினைகளெல்லாம் எளிதாகவே தீரும். உள்ளத்திலும் ஒரு சாந்தி பிறக்கும், இந்த ஆண்டவனை, பாசுப்பிரமணியனைத் தரிசித்து விட்டு வெளியே வந்து வடக்கு நோக்கித் திரும்பினால் அங்கு சண்முகன் நின்று கொண்டிருப்பார், அன்று படிக் காசுப் புலவர் கண்ட கோலத்திலேயே, ஆம், அன்னமும் மஞ்ஞையும் போல் இருபெண்களுடன் நிற்கும் ஆண் அழகனையே காணலாம். அவனையும் வணங்கிவிட்டு அவன் பிராகாரத்தை ஒரு சுற்று சுற்றி, துவஜஸ்தம்ப மண்டபத்துக்கு வந்து அந்தப் பிராகாரத்தையும் சுற்றலாம். அங்குதான் மேலப் பிராகாரத்தின் இரு கோடியிலும் வள்ளியும் தெய்வயானையும் தனித் தனிக் கோயிலில் இருப்பர். இதற்கடுத்த பெரிய பிராகாரத்திலே சூரசம்ஹாரக் காட்சி சிலை வடிவில் (உப்புச உருவில்) அர்த்த சித்திரமாக இருக்கும். இந்தக் கோயிலின் வடக்குப் பிராகாரத்திலே வேங்கடவன் கொலு வீற்றிருக்கிறான். அங்கு மணல் மேட்டைக் குடைந்து அமைத்த அனந்தசயனனையும் கஜலட்சுமியையும் தரிசிக்கலாம்.

இக்கோயிலில் உள்ள ஆறுமுகனைப் பற்றிய ரசமான வரலாறு ஒன்று உண்டு, 1648-ம் வருஷம் மேல் நாட்டிலிருந்து வந்த டச்சு வர்த்தகர்கள் இங்கு வந்து தங்கியிருக்கிறார்கள். அவர்கள் பொன் வண்ணத்தில் இருக்கும் ஆறுமுகனைக் கண்டு களித்திருக்கிறார்கள், அந்த மூர்த்தியை எடுத்துச் சென்றால் அத்தனை பொன்னும் தங்களுக்கு உதவுமே என்று கருதி, அந்த மூர்த்தியைக் களவாடிக் கப்பலில் ஏற்றிச் சென்றிருக்கிறார்கள்: ஆனால் ஆறுமுகனோ அவர்களுடன் நெடுந்தூரம் செல்ல விரும்பவில்லை. ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறான். கொந்தளிக்கும் கடலிலே டச்சுக்காரர் கப்பல் ஆடியிருக்கிறது. இனியும் ஆறுமுகனைத் தங்கள் கப்பலில்