பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

வேங்கடம் முதல் குமரி வரை

கோயில் கதவம் திறந்ததும் கண்ணை மூடியபடியே விழுந்தடித்து ஓடி வந்து குருவாயூரப்பனை தரிசித்து விட்டே மற்றவர்களைப் பார்ப்பார்கள். இப்படிப் பார்க்கிறவர்கள் ஏதோ சாதாரண பொது மக்கள் என்று மாத்திரம் எண்ண வேண்டாம். பெரிய பெரிய உத்தியோகஸ்தர்கள், பெரிய வீட்டுப் பெண்கள் கூட விஷு அன்று குருவாயூரப்பன் தரிசனத்திற்குக் காத்துக் கிடப்பர். அவரவர் அணிந்திருக்கும் துண்டுகளையோ, சேலை முந்தானையையோ விரித்துத் தான், அதில் படுத்து நித்திரை செய்வர்.

இந்த விஷு தரிசனம், மிக்க சிறப்பாக ஆண்டுதோறும் நடக்கிறது. நாளும் கூட்டம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குருவாயூரிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் நமக்கெல்லாம் விஷு அன்று குருவாயூரப்பனைக் கண்டு தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது எளிதான காரியம் இல்லைதான் என்றாலும் அவகாசம் கிடைக்கும் பொழுதெல்லாம் குருவாயூர் செல்லலாம். குருவாயூரப்பனாம் பரந்தாமனைக் கண்டு தரிசிக்கலாம். பெறற்கரிய பேறுகள் எல்லாம் பெறலாம். அத்தகைய வாய்ப்பினை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவே குருவாயூரப்பனைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லி, அவனிடத்து ஆற்றுப் படுத்தவே இக்கட்டுரை.

குருவாயூர் இன்றைய கேரள ராஜ்ஜியத்தில் நடுநாயகமான இடத்தில் இருக்கிறது. வடக்கே வட மங்கலமும் தெற்கே திருவாங்கூர் கொச்சியும் இருக்க, இரண்டுக்கும் இடையிட்ட இடத்தில் இருக்கிறது. வடக்கே இருந்து வருவோர் ரயிலில் வந்தாலும் காரில் வந்தாலும் ஷோரனூர் எல்லாம் கடந்து திருச்சூர் வந்து சேர வேணும். அங்கிருந்து மேற்கு நோக்கி, 15, 15 மைல் போய் அதன்பின் தெற்கே திரும்பி, நான்கு மைல் போனால் குருவாயூர் போய்ச் சேரலாம்.

போகிற வழி எல்லாம் ஒரே தென்னம் சோலைகள் தாம், கண்ணுக்கு மிகவும் இனிமையான பசுமை நிறைந்த