பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

49

திருக் கண்ணபுரத்து உறையும்
எண்திசையும் எழு கடலும்
இருநிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு
இழந்தேன் என் ஒளிவளையே.

என்று, இந்த மங்கை மன்னன் கண்ணபுரத்தானை நினைந்து நினைந்து, தான் வளை இழந்ததைச் சொல்லிச் சொல்லி புலம்புகின்றபோது, இக்கண்ணமங்கை அபிஷேக வல்லியை நினையாதது அதிசயம் இல்லை தானே. ஆனால் நான் மங்கை மன்னன் போல் ஒரு மங்கை அல்லவே, ஆதலால் அபிஷேகவல்லி சந்நிதிக்கும் சென்றேன். வணங்கினேன். துதித்தேன், அங்கும் ஓர் அதிசயம் காத்துக் கிடந்தது எனக்கு. இந்தத் தாயார் சந்நிதியிலே ஒரு பெரிய தேன் கூடு. இந்தத் தேன் கூடு, அங்கே எப்போது கட்டப்பட்டது என்று சொல்வார் ஒருவரும் இல்லை.

ஆனால் இந்தத் தேன் கூடு இங்கே கட்டப் பட்டிருப்பதற்குக் கதை மட்டும் உண்டு. கண்ணமங்கையானைப் பிரிய விரும்பாத முனி புங்கவர் பலர் தேனீயாகப் பிறக்கவரம் வாங்கிக் கொண்டார்களாம். அவர்களே இங்குக் கூடு கட்டி அனுவரதகாலமும் பக்தவத்சலன், அபிஷேக வல்லி இருவரையும் சுற்றி சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறார்களாம். அவர்களுக்குத் தேன் கிடைப்பதும் சிரமமானதாக இல்லை. பெருமாளின் திருமார்பில் அலங்கரிக்கும் அலங்கல் மாலையிலேதான் அளவிறந்த தேன் உண்டே. அந்தத் தேனையே உண்டு உண்டு, திளைத்து எந்நேரமும் பாடிக் கொண்டே சுற்றிச் 'சுற்றி வருகிறார்கள். இத்தேன் கூட்டையும் தேனீக்கள் பாடும் பாட்டையும் கேட்டுத்தானே

வே.மு.கு.வ-4