பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

73

சித்தன்ன வாசல் சமணக் குகைக் கோயிலிலே முதற்கட்டின் விதானத்திலே சித்திரித்திருக்கிறான் மன்னன் மகேந்திர வர்மன். ஜைனர்களுடைய சுவர்க்கம் ஆகிய சாமவ சரவணப் பொய்கையையே சித்திரிக்க முயன்றிருக்கிறான். எல்லாம் கல்லின் மேல் சுண்ணாம்பு பூசி அதன் மேல் என்றும் அழியா வர்ணங்களைக் குழைத்துத் தீட்டிய சித்திரங்கள் தான்.

சித்தன்ன வாசலைத் ‘தமிழ் நாட்டின் அஜந்தா' என்று சொல்லலாம். அஜந்தா செல்ல அவகாசம் இல்லாதவர்கள் சித்தன்ன வாசலுக்கு நடையைக் கட்டலாம். தொண்டைமான் புதுக் கோட்டைக்குச் சென்று, அங்கிருந்து காரிலோ வண்டியிலோ நேரே மேற்கே சென்றால், இந்தக் குகை வாயிலின் முன் கொண்டு விடும். பின் அங்குள்ள இரும்புக் கிராதியைக் காவலன் மூலம் திறந்து உள்ளே சென்று முதற் கட்டில் நுழைய வேண்டும்.

கொஞ்சம் நம்முடைய கௌரவத்தை யெல்லாம் கட்டித் தூர வைத்து விட்டு, மேலே கிடக்கும் துண்டை எடுத்துக் கீழே விரித்து அதில் படுத்துக் கொண்டு அண்ணாந்து பார்த்தால் - பார்க்கலாம் நான் மேலே சொன்ன சித்திரங்களை. கொஞ்ச நேரம் இமை கொட்டாது பார்த்தால், அந்தச் சித்திரக்காரப் புலி செய்துள்ள வர்ண விஸ்தாரங்கள் அழகிய காட்சிகள் எல்லாம் தத்ரூபமாய்க் காட்சியளிக்க ஆரம்பித்து விடும். படுத்தவர்கள் அப்படியே மயக்கம் போட்டு விடாமல், அப்படியே துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு மற்றக் காட்சிகளையும் பார்க்கலாம். தடுப்பவர் ஒருவருமே கிடையாது.

சித்தன்ன வாசல் குகைக் கோயில் மிகவும் சிறிய கோயில்தான். உள்ளே ஒரு சதுரமான அறையும் வெளியே ஒரு நீண்ட தாழ்வாரமுமே. எல்லாம் கருங்கல்