பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

75

என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லைதான். அவனுடைய காம்பீர்யம் அவனுடைய மகுடத்திலேயே தெரிகிறது. அவனுடைய முகத்திலோ களை சொட்டுகிறது. “நல்ல பணியை நாமும் தமிழ் நாட்டிலே செய்து முடித்து விட்டோம்” - என்ற ஆத்ம திருப்தியை அவன் கண் களிலே காண்கிறோம்.

ஆனால் ஒரே ஒரு எச்சரிக்கை. இந்த இரண்டு சித்திரங்களையும் பார்ப்பதற்கு சூட்சும திருஷ்டி வேண்டும். மங்கிய சித்திரங்கள்தான் அங்கே இப்போது இருக்கின்றன. கண்ணாடிக் கண்ணர்கள் யாராவது போய், 'ஒன்றுமே தெரியவில்லையே' என்று சொன்னால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

வெளித் தாழ்வாரத்தை விட்டு உள்ளே சென்றால் அங்கும் சுவரெல்லாம் சித்திரம். பல இடங்களில் பொரிந்து விழுந்து விட்டன என்றாலும், விதானத்தில் எழுதப்பட்டுள்ள சித்திரம் மட்டும் ஆசு அழியாமல் இருக்கிறது. கம்பளம் விரித்தாற் போன்ற சித்திரம் வெகு அழகாய் இருக்கிறது. ஜைனர்கள் கற்பனை செய்துள்ள தெய்வ லோகக் காட்சியே அங்கு சித்திரிக்கப்பட்டிருக்கிறது. அங்கும் மூன்று தீர்த்தாங்கரர்களின் உருவம் கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குகைக் கோயிலைப் பல்லவ சக்கரவர்த்தி மகேந்திரவர்மன், அப்பர் பெருமான் அருளால் சைவ சமயத்தைத் தழுவுவதற்கு முன் செய்து முடித்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறார்கள் சரித்திரக்காரப்புலிகள். ஜைனனாக இருக்கும் போதே இந்தச் சித்திரங்களை எழுதியிருக்க வேண்டும் என்று வேறே சொல்கிறார்கள். மன்னன் மகேந்திரனைப் போன்ற மகா ரஸிகர்கள், ஜாதி மதபேதங்களுக் கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.