பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வேங்கடம் முதல் குமரி வரை

கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் எல்லாவற்றையும் கடக்கிறார், ஓரிடத்தும் தங்காமலேயே. கடைசியாக பதினேழு மைல் நடந்ததும் ஊர் தெரிகிறது. விசாரித்தால் அதுதான் ஆழ்வார் திருநகரி என்கிறார்கள். ஊருக்கு வடபுறம் தாமிரபரணி ஓடுகிறது. படித்துத் தெரிந்து கொண்டதும், முன் சென்றவர்கள் சொன்ன அடையாளங்களும் சரியாகவே இருக்கின்றன. பக்தரது உள்ளத்திலே ஒரே குதூகலம். பக்தர் நல்ல கவிஞரும் கூட, அவரது உள்ளத்தில் எழுந்த உற்சாகம் கவிதையாக பிரவகிக்கிறது. பாடுகிறார் அவர்:

இதுவோ திரு நகரி?
ஈதோ பொருநை?
இதுவோ பரம பதத்து
எல்லை - இதுவோ தான்
வேதம் பகர்ந்திட்ட
மெய்ப்பொருளின் உட்பொருளை
ஓதும் சடகோபன் ஊர்?

இதுதானா ஆழ்வார் திருநகரி? இதுதானா தண் பொருநை? இதுதானா வைகுந்தநாதன் தங்கும் பரமபதத்து எல்லை? - இதுதானோ வேதத்தின் உட்பொருளையெல்லாம் திருவாய் மொழியாகப் பாடிய - சடகோபன் என்னும் நம்மாழ்வார் பிறந்த பதி. அடடா!