பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

81

தொலைவில்லிமங்கலம் என்னும் கிராமத்தில் ஆற்றின் வடகரையை அடுத்து இருக்கும் இரட்டைத் திருப்பதிகளைக் காண தென் கரையிலிருந்து நடந்தே ஆற்றைக் கடந்து செல்வதுதான் நல்லது. வசதியானதும் கூட இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதை விட யாத்திரையையே துவங்கி விடுவது நல்லது.

திருநெல்வேலியிலிருந்து பஸ்ஸிலோ ரயிலிலோ, முதலில் ஸ்ரீவைகுண்டம் போய்ச் சேர்ந்து விடுவோம். ரயிலில் சென்றால் தாமிர பருணியின் தென்கரையில் புதுக்குடி என்ற சிற்றூரில் தான் இறங்குவோம். இனி ஆற்றின் பேரில் கட்டியிருக்கும் பாலத்தின் வழியாக நடந்து ஸ்ரீவைகுண்டம் ஊர் போய்ச் சேரலாம். பாலத்தின் மீது போகும் போதே நீண்டுயர்ந்த கோபுரம் தெரியும். அதை நோக்கி நடந்தால் அங்குள்ள கள்ளப்பிரான் கோயில் வாயில் வந்து சேருவோம்.

விறு விறு என்றே உள்ளே நுழைந்து, அர்த்த மண்டபம் சென்றால் அங்கே தங்கத்தால் ஆன மஞ்சத்திலே திருமகளும் நிலமகளும் இருபுறமும் நிற்க, கள்ளப்பிரான் கையில் கதையுடன் நிற்பார். அவர் நம் உள்ளம் கவரும் கள்வராக பேரழகுடன் இருப்பார். இவருக்கும் பின்னாலேதான் மூலவராக கருவறையிலே வைகுந்த நாதர் தனித்தே நிற்கிறார். இவர் பலகாலம் மண்ணுள் மறைந்திருந்ததாயும், அந்த இடத்திலே பசுக்கள் எல்லாம் பால் சொரிந்து நிற்க, அதன் பின்னரே வெளி வந்திருக்கிறார். அதனால் அவரை பால் பாண்டியன் என்றும் செல்லமாக அழைக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் ஐந்து ஆறாம் தேதிகளில் காலையில் இளஞ்சூரியனது கிரணங்கள். கோபுரவாயில் மண்டபங்கள் எல்லாம் கடந்து வந்து வைகுந்த நாதர் மேனியைப் பொன்னிறமாக்குகின்றன.

வே.மு.கு.வ-6