பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வேண்டும் விடுதலை

கப்பல் கப்பலாக ஏற்றிக் கொண்டு வந்து நமக்குக் கொடுத்தான்; உடைகளை நன்றாக உடுக்கக் கற்றுக்கொடுத்தான். இருந்தாலும் இவற்றிலெல்லாம் நாம் நிறைவுபெற்றுவிடாமல், நம் குடுமி என்னவோ அவன் கையிலிருப்பது போன்ற உணர்ச்சியே நமக்கிருந்து வந்தது. நம் கைகால்களைக் கட்டிப் போட்டு வைத்துக் கொண்டு நமக்குச் சோறு போட்டுக் காப்பது போன்ற உணர்ச்சியே நம் எல்லாருக்கும் இருந்தது. எனவே நாம் அவனுக்கு அடிமையுற்றுக் கிடப்பதாகக் குமுறினோம்; குமைந்தோம்; புழுங்கினோம்; பேசினோம்; எழுதினோம்; இறுதியாக அவனிடமிருந்து நாம் விடுதலை பெற்றுவிட்டதாக ஒருகால் பகுதித்தாளில் எழுதி வாங்கிக் கொண்டு அவனைக் கப்பலேற்றி இங்கிலாந்துக்கு அனுப்பி விட்டோம்.

அந்தக் கால் தாளை நாம் (நாம்கூட அன்று ; நமக்காக யாரோ ஒருவர்) வாங்கிக் கொண்டவுடன், நமக்கென்னவோ நம் கைகால்களில் உள்ள விலங்குகளெல்லாம் தகர்க்கப்பட்டன. போன்ற ஓர் இன்ப உணர்ச்சி இருந்தது; உரிமைஉணர்ச்சி இருந்தது. இந்த மகிழ்ச்சியில் நாம் ஆடினோம்; பள்ளுப் பாடினோம்! ஆரவாரம் செய்தோம். ஆனால் அதன் பின்னும் நமக்குப் பசித்துக்கொண்டு தான் இருந்தது; உடை தேவையாகத்தான் இருந்தது; நாமும் உழைத்துக்கொண்டுதான் இருக்க வேண்டியிருந்தது. நாம் இந்த உலகில் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் உழைத்துத் தான் ஆகவேண்டும்; சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்; தொல்லைப்பட்டு வாழ்ந்துதான் ஆகவேண்டும். இவற்றிலிருந்து எவனும் நம்மை விடுதலை செய்துவிட முடியாது. ஆனால் இவற்றைப் பற்றி யெல்லாம் விளங்கிக் கொள்ளாத நம் தலைவர்கள் அன்றெல்லாம் "வெள்ளைக்காரனை நாம் ஓட்டிவிட்டால் நம் ஆற்றிலெல்லாம் தண்ணீருக்கு மாறாகப் பால் ஓடும்; நெய் ஒடும்; நம் மலைகளில் கொட்டிக் கிடக்கும் கல்லெல்லாம் பொன்னாகும்; கடுகெல்லாம் மலையாகும்” என்றெல்லாம் கனவுகண்டு கிளுகிளுப்பை மூட்டிக் கற்பனைவளம் பொங்கப் பேசினார்கள், ஆனால் வெள்ளைக்காரன் போனபின் நம் ஆறுகளில் பாலும் ஒடவிலை, நெய்யும் ஓடவில்லை. இருந்த தண்ணீரும் வற்றிப்போனது. கல்லெல்லாம் பொன்னாகவில்லை; கடுகும் மலையாகவில்லை; நம் பெண்டு பிள்ளைகள் காதுகளிலும் மூக்குகளிலும் போட்டுக் கொண்டிருந்த கடுகத்துணைப் பொன்னும் பறிபோய்விட்டது. பின் என்னதான் பயன்? உரிமை பெற்றது எதற்கு? விடுதலை பெறுவது எதற்கு? இந்தக் குழப்பங்கங்களி லிருந்துதான் நாம் உண்மையை