பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


புராணப் பொருள்: புராணம் இம்மை, மறுமை ஆகிய இரண்டுக்கும் துணைபுரியக்கூடிய பொருள்களை நவில்கின்றன. புராணத்தில் குறிப்பிடப் பெறாத பொருளே இல்லை. வேதங்களில் கூறப்பெற்ற பொருளை விளக்கிக் கூறுவதே புராணம். வேள்விகள், உயிர்களின் படைப்பு, உலக அமைப்பு, யோகம், நோன்பு, நவக்கிரக மண்டலம், அவற்றின் போக்கு, சுவர்க்க நரகம், வழிபாடு, உலக அமைப்பு, மருத்துவம், நாடிவிசாரணை, மந்திரம், தோத்திரம், சகுனம் முதலான பொருள்கள் இங்கு சொல்லப் பெற்றுள்ளன. இவை பற்றிக் கவச தோத்திரங்களும் ஆங்காங்கு விரித்துச்சொல்லப் பெற்றுள்ளன. (எ-டு). சக்தி கவசம். அதிவீரராமர் பாடிய காசி கண்டம். அத்தியாயம் 72, 13 பாடல்கள். துர்க்கம் என்னும் அசுரனை வதைத்த உமா தேவியைத் தேவர்கள் துதித்தது. இலக்குமி கவசம். காசி கண்டம். அத்தியாயம் 5, ஏழு பாடல்கள். அகத்திய முனிவர் துதித்தது. நாராயண கவசம். செவ்வைச் சூடுவார் பாகவதம். கந்தம் 6. அத்தியாயம் 4, 25 பாடல்கள்; விசுவரூபன் இந்திரனுக்கு உரைத்தது.

15-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ்நாடெங்கும் போர்கள் மலிந்து விட்டன. முதலில் இஸ்லாமியர் படையெடுப்பால் நேர்ந்த இன்னல்கள். மேலை நாட்டினர் வாணிகத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்கள், இப்போர்களில் சாமானிய மக்களேயன்றி சிறந்த சமய வாழ்க்கை நடத்த வசதியான நிலையிலிருந்த மக்களும்கூட ஈடுபட நேர்ந்தது. இவர்கள் கையிலேந்திய படைக்கலங்களால் தங்களைக் காத்துக் கொண்டதுடன் காப்பாக ஒரு தெய்வ கவசமும் தேடினார்கள்[1]. இவர்கள் சக்தியுணர்வே இக்கவசம் அமைக்கும் தோட்டமாகும். இந்த நிலையில் எழுந்தனவே இக்கவசங்கள் எனக் கருதலாம். இவை முதலில் வடமொழியில் எழுந்தன; பின்னர் அந்த மரபையொட்டித் தமிழிலும் தோன்றலாயின.


  1. உடலைப் பாதுகாப்பதற்காகப் போருக்குச் சென்ற வீரர்கள் இரும்புக் கவசம் அணிந்தார்கள். அதுபோல இறைவன் புகழைப் பகர்ந்து அவன் இன்ன இன்ன உறுப்புகளைக் காப்பானாக என்று அவன் பெயர்களையே சொற்கவசமாக அமைத்துக் கொள்ளுதல் தோத்திரக் கவசமாகும். திருவாய்மொழி பன்னிரு திருநாமப்பதிகம் (திருவாய் 2.7) ஈண்டு நினைவு கூரத்தக்கது.
12