பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

21


4 தரிசு நிலங்களை எல்லா மாவட்டங்களிலும் விலைக்கு வாங்கி, விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் நவீன விஞ்ஞான முறைகளில் பயிற்சியளித்து, அவற்றைப் பண்படுத்தி, விவசாய வளர்ச்சிக்குத் தொண்டாற்றுவது.

இந்நோக்கங்கள், நமது பொதுமக்களை ஒற்றுமைப்படுத்தி, செயல்படுத்தி, சுதேசி, சுயராஜ்யம், போராட்டம் என்ற மூன்று அம்ச இயக்கங்களில் ஈடுபட வைப்பவை. ‘சுதேசி பிரச்சார சபை'யின் கிளையொன்று பிற்காலத் தொழிற்சங்கத் தலைவர் வி. சக்கரைச் செட்டியாரின் முயற்சியில் அமைக்கப்பட்டது.

சுதேசி இயக்கத்தின் நோக்கங்களுக்குட்பட்டு, ‘சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி’ என்ற ஒரு கப்பல் போக்குவரத்து நிறுவனம் அமைக்க சிதம்பரம்பிள்ளை முற்பட்டார். இந்நிறுவனம் இரண்டு கப்பல்களைக் குத்தகைக்கு எடுத்தோ, விலைக்கு வாங்கியோ கடலில் ஓடவிடுவதெனத் தீர்மானித்தது. இக்கப்பல்களைத் தொடக்கத்தில் உள்நாட்டுக் கடற்கரை வாணிகத்திலும், இலங்கை இந்தியப் போக்குவரத்திலும் ஈடுபடுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

சுதேசிக் கப்பல் கம்பெனி

இந்திய நாட்டுக் கடற்கரை வணிகம் முழுவதும் பிரிட்டிஷ் கம்பெனிகள் கையில் இருந்தது. முதல் சுதேசிக் கப்பல் கம்பெனியை வ. உ. சி. தொடங்கியதும் அவர்கள் தங்கள் வணிகம் போய்விடும் என்று கலக்கமடைந்தார்கள். ஏராளமான கப்பல்களைச் சொந்தமாகக் கொண்ட பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற வெள்ளையர் நிறுவனம் கிழக்குக் கடற்கரையிலிருந்து இலங்கை, ரங்கூன், மலாசியா நாடுகளுக்குக் கப்பல்கள் விட்டது. சுதேசிக் கப்பல்களின் பொருளாதாரப் போட்டிக்காகப் பிரிட்டிஷ் கம்பெனிகள் அஞ்ச, அதனால் சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனிக்கு லாபம் கிடைத்தது. பல சுதேசி நிறுவனங்கள் முளைத்துப் பெரிதாகிச் சுதேசி இயக்கத்தின் தாக்கத்தால் பிரிட்டிஷ் கப்பல் போக்குவரத்துத் தொழிலே அழிந்துவிடும் என்று அவர்கள் பயந்தார்கள். இந்தப் பயத்திற்கு உண்மையான அடிப்படை உண்டு.

சுதேசிக் கப்பல் கம்பெனிக்குக் கப்பல்கள் கிடையாது என்று வதந்திகள் கிளப்பிவிடப்பட்டன. வ. உ. சி. பம்பாய்க்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு திலகரின்