உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஸ்தாபன ஐக்கியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

ஸ்தாபன ஐக்கியம்

தேடவேண்டும் என்ற முடிவுசெய்து, ஸ்தாபனங்களை ஏற்படுத்தினர். இந்தப் பொதுத்தன்மை கெடாதிருக்குமட்டும், ஸ்தாபனம் அவசியமானது என்பது மட்டுமல்ல, பயனுள்ளதுமாகும்.

எனவே, ஸ்தாபன ஐக்கியம், இந்தப் பொது உணர்ச்சி கெடாதபடி பாதுகாத்துக்கொண்டால்தான் முடியும். கந்தன் முருகனுக்கும் சேர்த்துத்தான் நியாயம் கோருகிறான். முத்தன், மூவருக்கும் சேர்த்தே நீதி கேட்கிறான். ஒவ்வொருவரும் மற்ற யாவருக்கும் சேர்த்தே நீதி நியாயம் கேட்கிறார்கள். ஸ்தாபனத்தின் முக்கிய இலட்சணம், இதைப் பொருத்தே இருக்கிறது. அதைச் சேர்ந்தவர் அனைவருக்கும் நலன் கிடைக்கிறது, என்பது விளக்கமானால்தான் ஸ்தாபனத்திலே ஐக்ய உணர்ச்சி இருக்க முடியும். கந்தனுக்குத் தெரியாமல் முருகனும், முருகன் அறியாவண்ணம் முத்தனும், தனித்தனியே நடவடிக்கை எடுத்தால், ஸ்தாபனம் உடைந்துபடும். பொதுத்தன்மைதான் ஸ்தாபனத்துக்கு அரண்.

இந்தப் பொதுத்தன்மை பலமாக இருக்கவேண்டுமானால், ஸ்தாபனம், மிக மிக நியாயமான கொள்கைகளின் மீது கட்டப்படவேண்டும்.

குடும்பம் முதற்கொண்டு கோலோச்சும் சர்க்கார்வரையிலே, ஸ்தாபனங்கள்தான். ஒருவகைப் பொதுத்தன்மை — பொதுவான பணிகள் — அனைவரையும் கட்டுப்படுத்தும் பொதுவான பொறுப்புகள், பலன்கள் இவைகளில் உண்டு. இதிலே எது கெடினும், ஸ்தாபனத்தின் ஐக்கியம் நிச்சயமாகக் கெட்டுவிடும். அண்ணன் அறியாதபடி தம்பி செலவிடும் பத்து ரூபாய், அண்ணன் தம்பி என்ற பாசத்தால், சில நாட்களுக்குக் குடும்பத்தை எவ்விதத்திலும் பாதிக்காமலிருக்கும். ஆனால் சில காலத்துக்குத்தான்—எப்போதுமல்ல. தம்பியின் பழக்கமே