பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பாடற்றிரட்டு.

இதனைப்பற்றிய மதிப்புரைகளிற் சில :—

“இப்புத்தகத்திலுள்ள பாக்களை இயற்றிய ஶ்ரீமாந். வ. உ. சிதம்பரம் பிள்ளை யவர்களைப்பற்றி நாம் விசேடித்தெழுதவேண்டியதொன்று மில்லை. உலகமறிந்த தேசாபிமானியாகிய இவர்களைப்பற்றி எழுதுவது மிகையேயாகும். இப்புத்தகத்தில் இவர்கள் சிறைவாசத்திற்கு முன் பாடிய பல செய்யுள்கள் முதற்பாகமாகவும் கோயமுத்தூர் கண்ணனூர்ச் சிறை வாசகாலத்தில் பாடிய பல தனிப்பாக்கள் இரண்டாம் பாகமாகவும் சேர்க்கப்பட்டுள்ளன. பாடல்களெல்லாம் நவின்றோர்க்கினிய நன்மொழிகளால் விழுமிய பொருள் பயக்குமாறு இனியஓசை கொள்ள யாக்கப்பட்டுள்ளன. தம் பிதா, மனைவி, முதலிய பலர்க்குக் கடித முகமாக எழுதிய கவிகள் மிகவும் உருக்கந்தந்து விளங்குவன. நீதிபோதனைச் செய்யுள்களோ பண்டைக்கால நீதி நூல்களோடொப்பத் திட்ப நுட்பங் கொண்டுள்ளன. ஈகை, அன்பு, உண்மை , ஊழ்வலி, முயற்சித்திறம் முதலிய பல விஷயங்களைப்பற்றிய அருமையான செய்யுள்கள் பல இதனுட் காணப்படுகின்றன. ஒருவன் துன்பம் வந்தகாலத்துக் கலங்காது அதனையே இன்பமாக நினைத்தல் அத்துன்பத்தை வெல்லத்தக்க கருவியாம் என்பதை இப்புத்தகத்துள் நன்கு காணலாம். இஃது அகச்சிறப்புக்களுடன் நல்ல கடிதம், நல்ல அச்சு, பயிண்டு ஆகிய புறச்சிறப்புக்களும் பெற்றுளது.”—வித்தியாபாநு, மதுரை.

“இந்நூலிலுள்ள பாக்கள் நம் தேசாபிமானச் செல்வரான ஶ்ரீமாந். வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்களால் சிறைக்குச் செல்லுமுன்னும், சென்றபின்னும் பல சமயங்களில் பாடப்பட்டவை. ‘தனிப்பாடற்றிரட்டு’ என்னும் புத்தகத்துக்குப் பின், தமிழ் வித்துவான்கள் சமயாசமயங்களில் பாடியவைகளைத் தொகுத்து வெளிவந்ததில் இதற்கு முன் ‘பாவலர் விருந்து’ ஒன்று தவிர வேறு கண்டிலேம். மேலும், இப்பாடல்களில் பெரும்பாலன, வெண்பாக்கள். வெண்பாக்களில் சமயத்துக்கேற்றபடி பாடியவர்—ஶ்ரீகாளமேகப் புலவருக்குப் பின்—அரியர். இக்காலத்தே இவ்வருமையான செந்தமிழ்ப்பாக்களைக் காணுதல் வியத்தற்கு உரிய தொன்றாம். ஆதலின், ஒவ்வொருவரும் இதனை வாங்கிப் படித்தல் நன்மையே பயக்கும் என்போம்.”—விவேகபாநு, டர்பன், தென் ஆபிரிக்கா.