பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதனூற் பாயிரம்


உலகத்தைச் சுற்றிப் பார்த்தேன். அது துன்ப நெருப்பால் சுடப்பட்டுத் துக்கப் புகையால் மூடுண்டிருக்கக் கண்டேன். அதன் காரணத்தைக் காண நினைத்தேன். அதனை உலகமெல்லாம் தேடினேன்; அதனை அங்குக் கண்டிலேன். நூல்களுள் தேடினேன்; அதனை அங்கும் கண்டிலேன். அகத்துள் தேடினேன்; அதனையும் அது அவரவரால் ஆக்கப்பட்டுள்ள தன்மையையும் அங்குக் கண்டேன். மறுபடியும் அகத்துள் ஆழ்ந்து நோக்கினேன்; அதனைப் பரிகரிக்கும் மருந்தினைக் கண்டேன். அம்மருந்தாவது ஒரு சட்டம்; அன்பாகிய சட்டம். அஃது ஓர் ஒழுக்கம்; அச்சட்டத்திற்கு அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அஃது ஓர் உண்மை, மனத்தை வென்று கீழ்ப்படுத்தி அமைதியாக்கும் உண்மை. புருஷர்களும் ஸ்திரீகளும், வலியராயினும் எளியராயினும், கற்றாராயினும் கல்லாராயினும், இல்வாழ்வாராயினும் துறவிகளாயினும், சகல வெற்றிகளுக்கும், சகல சித்திகளுக்கும், சகல இன்பங்களுக்கும், சகல சுகங்களுக்கும், சகல உண்மைகளுக்கும் மூலமாயுள்ள பொருளைத் தமது அகத்துள் காண்டற்கு உதவி புரியும் ஒரு நூலை எழுதுவதாக ஒரு கனவு கண்டேன். அக்கனவு நீண்ட காலமாக என் உள்ளேயிருந்தது. அது கடைசியில் நனவாய் வெளிப்பட்டு விட்டது. உலகத்தின் துன்பத்தையும் துக்கத்தையும் நீக்கி, அதற்கு இன்பத்தையும் சுகத்தையும் அளிக்குமாறு அதனை இப்பொழுது அனுப்புகின்றேன்.

(ஒப்பம்) ஜேம்ஸ் ஆலன்.

iv