பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

புலன், இழைபு, அணி- சொல்லணி, பொருளணி, ஒலியணி. வண்ணம் - குறி லகவற்றூங் கிசை, வண்ணம், முதலியன ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பாவலர் ஒவ்வொரு குணத்தினாலே சிறந்து விளங்க நூல் செய்தனர்; இவரோ வெனில் எல்லாக் குணங்களாலும் நிறைந்து சிறந்து விளங்கச் செய்தமையின், இவ்வாறு கூறினார். இதன் பாக்களின் சிறப்புச் சொல்லிய படி. (௪௰௫)

அக்காரக்கனி நச்சுமனார்.

கலை நிரம்பிக் காண்டற் கினிதாகிக் கண்ணின்
நிலைநிரம்பு நீர்மைத் தெனினும்-தொலைவிலா
வானூர் மதியந் தனக்குண்டோ வள்ளுவர்முப்
பானூ னயத்தின் பயன்.

இ-ள். கலை நிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணி னிலை நிரம்பு நீர்மைத்து எனினும்- மதியமும் முப்பா னூலும் பதினாறு கலைகளாலும் அறுபத்து நாலு கலைகளாலும் நிறைந்து, காண்டற்கு இனிதாகி-ஆராய்ச்சி செய்தற்கு இனிதாகி, கண்ணின் நிலை நிரம்பும் நீர் மைத்து எனினும் - முகக் கண்ணி னிலையில் அகக் கண்ணி னிலையில் நிரம்புகின்ற தன்மை யுடைத்தாயினும், குண முடைத் தாயினும், வள்ளுவர் முப்பா னூல் நயத்து இன் பயன் தொலைவு இலா வான் ஊர் மதியந் தனக்கு உண்டோ- திருவள்ளுவரது முப்பா னூலினது நயத்தால் விளைவதாகிய இனிய பயனானது ஒழிவின்றி ஆகாசத்தின்கண்ணே திரிகின்ற மதியினிடத்து உண்டோ?

மதியந் தனக் கென்றது வேற்றுமை மயக்கம். 'ஓகாரம்' எதிர்மறை.

ஆதாரமாகக் கொள்ளுதற்கு ஏற்புடைத் தல்லாத வானை ஆதாரமாகக் கோடலின், இழிவு தோன்றத் தொலை விலா வானூர் மதிய மென்றார். நயம் - மறுப்படாமை, மழுங்காமை, குறைவுறாமை முதலியன. பயன்- இம்மை மறுமை வீட் டின்பங்கள்.

48