பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


"(ii) அத்தகையவர், 1948 ஜூலை பத்தொன்பதாம் நாளன்றோ அதற்குப் பின்போ அவ்வாறு குடிபெயர்ந்துள்ள நேர்வில், இந்தியாவின் குடிமகனாகத் தம்மைப் பதிவுசெய்து கொள்வதற்கென, இந்தியத் தன்னாட்சிய அரசாங்கத்தினால் அதன்பொருட்டு அமர்த்தப்பெற்ற ஓர் அலுவலரிடம், அவ்வரசாங்கத்தினால் வகுத்துரைக்கப்பட்ட வடிவத்திலும் வயணத்திலும், இந்த அரசமைப்பின் தொடக்க நிலைக்கு முன்பு தம்மால் செய்துகொள்ளப்பட்ட ஒரு விண்ணப்பத்தின்மீது அத்தகைய அலுவலரால் அவ்வாறு பதிவுசெய்யப்பெற்றுள்ளவராகவும் இருப்பின்,

அவர், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையில் இந்தியாவின் குடிமகன் எனக் கொள்ளப்பெறுவார்:

வரம்புரையாக: ஒருவர், தாம் விண்ணப்பித்த தேதியை ஒட்டி முன்பு குறைந்தது ஆறு மாதங்களேனும் இந்திய ஆட்சிநிலவரையில் குடியிருந்தவராக இருந்தாலன்றி, அவரை அவ்வாறு பதிவுசெய்தல் ஆகாது.

7. பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்துள்ள குறித்தசிலரின் குடிமைஉரிமைகள் :

5,6 ஆகிய உறுப்புகளில் எது எவ்வாறிருப்பினும், இந்திய ஆட்சிநிலவரையிலிருந்து, பாகிஸ்தானில் இப்போது உள்ளடங்கியுள்ள ஆட்சிநிலவரைக்கு, 1947 மார்ச்சு முதலாம் நாளுக்குப் பின்பு குடிபெயர்ந்துள்ள ஒருவரை இந்தியாவின் குடிமகன் எனக் கொள்ளுதல் ஆகாது

வரம்புரையாக: பாகிஸ்தானில் இப்போது உள்ளடங்கியுள்ள ஆட்சிநிலவரைக்கு அவ்வாறு குடிபெயர்ந்த பின்பு, சட்டம் ஒன்றின் அதிகாரத்தாலோ அதன் வழியாலோ மறுகுடியமர்வுக்காக அல்லது நிலையாகத் திரும்புவதற்காக வழங்கப்பட்ட ஓர் இசைவுச்சீட்டின்படி இந்திய ஆட்சிநிலவரைக்குத் திரும்பி வந்திருக்கின்ற எவருக்கும், இந்த உறுப்பிலுள்ள எதுவும் பொருந்துறுதல் ஆகாது; அத்தகைய ஒவ்வொருவரும், 6ஆம் உறுப்பின் (ஆ) கூறினைப் பொறுத்தவரை, 1948 ஜூலை பத்தொன்பதாம் நாளுக்குப் பின்பு இந்திய ஆட்சிநிலவரைக்குக் குடிபெயர்ந்திருப்பதாகக் கொள்ளப்பெறுவார்.

8. இந்தியாவுக்கு வெளியே குடியிருந்துவரும் குறித்தசில இந்திய மரபினரின் குடிமை உரிமைகள் :

5 ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், தாமோ தம் பெற்றோரில் ஒருவரோ தம் பாட்டன் பாட்டியரில் ஒருவரோ (முதற்கண் இயற்றப்பட்டவாறான), 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில் வரையறைசெய்யப்பட்ட இந்தியாவில் பிறந்திருந்து, அவ்வாறு வரையறைசெய்யப்பட்ட இந்தியாவுக்கு வெளியேயுள்ள நாடு எதிலும் வழக்கமாகக் குடியிருந்துவருகின்ற எவரும், இந்தியாவின் குடிமகன் எனப் பதிவுசெய்வதற்காகத் தாம் அப்போதைக்குக் குடியிருந்துவரும் நாட்டிலுள்ள இந்தியாவின் அரசுத் தூதுவரிடம் அல்லது குடி வணிகநலத் தூதுவரிடம், இந்தியத் தன்னாட்சிய அரசாங்கத்தினாலோ இந்திய அரசாங்கத்தினாலோ வகுத்துரைக்கப்பட்ட வடிவத்திலும் வயணத்திலும், இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்கு முன்போ பின்போ தம்மால் செய்து கொள்ளப்பட்ட ஒரு விண்ணப்பத்தின் மீது, அத்தகைய அரசுத் தூதுவரால் அல்லது குடி வணிகநலத் தூதுவரால் பதிவுசெய்யப்பெற்றவராக இருப்பின், அவர் இந்தியாவின் குடிமகன் எனக் கொள்ளப்பெறுவார்.

9. ஓர்அயல்நாட்டு அரசின் குடிமையினைத் தம்விருப்பாகப் பெற்றுள்ளவர்கள் குடிமக்கள் ஆவதில்லை :

எவரும், ஓர் அயல்நாட்டு அரசின் குடிமையினைத் தம்விருப்பாகப் பெற்றிருப்பாராயின், அவர் 5ஆம் உறுப்பின் பயன்திறன்வழி இந்தியாவின் குடிமகன் ஆவதில்லை; 6ஆம் உறுப்பின் அல்லது 8ஆம் உறுப்பின் பயன்திறன் வழியும் அவர் இந்தியாவின் குடிமகன் எனக் கொள்ளப்பெறுவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/28&oldid=1465335" இலிருந்து மீள்விக்கப்பட்டது