பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து



முன்னுரை


மனிதன் என்றுமே இயற்கையை ரசிக்கத் தெரிந்தவன். வண்ண வண்ணப் பூக்களின் அழகைக் கண்டு குழந்தை கூட வாய்விட்டுச் சிரிக்கிறது. இந்த ரசனை - குழந்தைப் பருவத்திலிருந்தே படிப்படியாக பல்வேறு விதத்தில் மனிதனின் கூடவே வளர்ந்து வருகிறது.

விரிந்த கடல், பரந்த ஆகாயம், உயர்ந்த மலைகள் பற்றி எரியும் நெருப்பு. தென்றலும், சூறா வளியுமான காற்று. இவை போன்ற இயற்கையின் அற்புதங்களின் பால் எழுந்த பிரமிப்பும், ரசனையும், ஈடுபாடுமே கலைஞர்களை உணர்ச்சி பூர்வமாகவும்; விஞ்ஞானிகளை அறிவியல் பூர்வமாக- 'ஏன்? எப்படி?'- என்றும் சிந்திக்கத் தூண்டின.

அறிவியல் வாதிகளின் இடைவிடாத இந்த சிந்தனைத் தூண்டலும்; இரவு பகல் பாராத அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளுமே இன்று பல்வேறு துறைகளில் மனித மேம்பாட்டை உயர்த்திச் சென்று கொண்டிருக்கின்றன.

அன்றாட வாழ்வில், நம்மோடு ஒட்டி உறவாடும். நிலம் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய ஐம்பூதங்களின் அறிவியல் ஆய்வுகளை சிறுவர்களும் பரிந்து கொள்ளும் விதத்தில் எளிய நடையில், ஒரு கதை போல் எழுதியுள்ளேன்.

குழந்தைகளின் உள்ளத்தில் அறிவியல் உணர்வைத் தூண்டிவிட இச்சிறு நூல் சிறிதேனும் உதவினால்- அதுவே இந்நூல் பிறந்ததின் பயனாகக் கருதுவேன்.

மிக்க அன்புடன்
நீலமணி