பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/முன் முயற்சிகளும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
4

முன் முயற்சிகளும்..

முதற்கட்ட முன்வைப்புகளும்...

நாட்டில் எழுந்த கொந்தளிப்புகளை சமாளிக்கும் விதமாக படித்த நடுத்தர வர்க்கத்தினர், மற்றும் படித்த உயர்சாதியினரின் பார்வையை தம் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் நோக்கில் இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள லண்டனிலிருந்த இந்திய செயலர் ஜான் மார்லி விரும்பினார். 1892ம் ஆண்டு சட்டத்தினால் மாகாண சட்ட சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த பிரதிநிதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி, ஸ்தல ஆட்சியில் அவ்வர்க்கங்களை பயன்படுத்த அவர் எண்ணினார். இந்த யோசனை வைஸ்ராய் மிண்டோவிற்கு ஏற்றதாக இருக்க இருவருமே அதற்கான வேலைகளில் இறங்கினர். மிண்டோவிற்கும் மார்லிக்கும் இடையே கடிதப் போக்குவரத்து நடந்தது. 1906 ஆம் ஆண்டு 15ம் நாள் மார்லி, மிண்டோவிற்கு எழுதிய கடிதத்தில்

'லண்டன் கவுன்சிலைப்போல உம்முடைய சட்டசபையில் உள்ளூர் புள்ளிகளை ஏன் அதிகரிக்கக் கூடாது. திருத்தங்களை கொண்டு வரவும், தேவைக்கும் குறைவாக நான்கு அல்லது ஐந்து மணி நேரம் விவாதம் நடத்தாமல் வரவு-செலவு விவாதத்தை முழு நேரமாக நடத்தினால் என்ன?... இத்தருணத்தில் சீர்திருத்தத்தை தொடங்கினால் என்ன?...'

என்று தம் ஆலோசனையை சொல்லி அதற்கான பதிலை எதிர் பார்த்தார். இப்படி சில கடிதப் பரிமாற்றங்களுக்குப் பிறகு 1906 ஆகஸ்டில் மிண்டோ பிரபு ஏடி அருண்டேல் தலைமையில் இ என் பேக்கர், ஏர்ல் ரிச்சர்ட்ஸ், மற்றும் மென்சில் இப்பெட்சன் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்து நான்கு நோக்கங்களை அதன் முன் வைத்தார். அதில் மார்லி சொன்ன ஆலோசனைகளே இருந்தன, இந்த குழு ஆய்வு செய்து, 1906 அக்டோபர் 12ல் தனது அறிக்கையை சமர்பித்தது.

மிண்டோ - மார்லி சொன்ன ஆலோசனைகளையும் சேர்த்து நிலச்சுவான்தாரர்களுக்கும், சிறுபான்மையினரான முஸ்லீம்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத் திருந்தது. இந்த அறிக்கையை 1907 மார்ச் மாதத்தில் வைஸ்ராய் செயற்குழு பரிசீலித்த பிறகு லண்டனிலுள்ள இந்திய செயலர் மார்லி பிரபுவுக்கு அனுப்பியது. அறிக்கையைப் பெற்ற மார்லி பிரபு நில உடைமையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்.

சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கியவுடன் அனைத்து சமூக மக்களிடையே ஆர்வம் அதிகமாகியது. குறிப்பாக படித்த உயர்சாதியினரிடம் வேகம் அதிகரித்தது. காங்கிரஸ் தொடர்ச்சியாக இந்தியர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரியது. அதன் நடைமுறைவாதிகளின் தலைவரான கோகலே தொடர்ந்து கடிதங்களை மார்லிக்கும் - மிண்டோவிற்கும் எழுதினார். மார்லி கோகலேவுக்கு கொடுத்த உறுதியின் அடிப்படையில் மார்லியை கோகலே புகழ்ந்து எழுதியதோடு, அவர்களுக்கு எதிரான அபிப்ராயங்கள் பத்திரிக்கைகளில் வருவதைக் கூட எதிர்த்தார். அதை தடுக்கவும் முனைந்தார். முஸ்லீம்களும் தம்பங்கிற்கு பிரிட்டிஷ் அரசின்மீது தீவிரமான விசுவாசத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த விசுவாச போட்டியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை பேசுவதற்கு காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இரண்டுமே தயாராய் இல்லை.

இப்படியான, நெருக்கடியான தருணத்தில் தான் 1907, ஜூன் மாதம் 17ம் நாள் " ஒரு பைசா தமிழன் " என்ற இதழை சென்னை சின்னதறிப் பேட்டை எனும் சிந்தாதிரிப்பேட்டை ஆதி மூலம் அச்சியந்திர சாலையில் அச்சிட்டு தொடங்கினார் பண்டிதர். முதல் இதழிலேயே அரச வந்தனம் இடம் பெற்றது. அரசியல் என்ற தலைப்பில் அரசு கோலாட்சிக்குரிய இலங்கணங்களை விளக்கியதோடு பிரிட்டிஷ் ஆட்சி நீடுழி வாழ வாழ்த்தினார். அதுவுமின்றி ஜூன் 26, 1907 இரண்டாம் இதழில் "சுதேச சீர்திருத்தம் என்ற தொடர் கட்டுரையை பண்டிதர் எழுதத் தொடங்கினார். சுதேசி என்று பேசும் உயர்சாதியினரின் வேஷம் என கடுமையாக சாடி, அந்த இயக்கத்தை அம்பலப்படுத்த தொடங்கினார். சுதேச சீர்திருத்தம் என்பது பணமும், படிப்பும் உள்ள உயர்சாதியினர் பதவிகளில் அமர்ந்து கொள்வதல்ல அதேசமயம், ஒடுக்கப்பட்ட மக்களை சீர்துக்கி, கை தூக்கி விடுவதே சுதேச சீர்திருத்தம் என்று எழுதியதோடு

"ஆடுகள் கசாயிகாரனை நம்பி பின் செல்வது போல் தங்கள் சுயப்பிரயோஜனங்களுக்காய் நம்மையும், நமது தேசத்தையும் கெடுத்துவரும் சத்ருக்களைப் பின்பற்றுவோமானால், தற்காலம் நாமடைந்திருக்கும் கிஞ்சுத்துவ சுகமும் கெட்டு சீரழிவது திண்ணம்." - என எழுதினார்.

இப்படி சுதேசி போராட்டக்காரர்களை, குறிப்பாக காங்கிரசாரை எதிர்த்து எழுதப்பட்ட இக்கட்டுரை 1908 அக்டோபர் 28 வரை தொடர்ந்து தொடராக வெளிவந்தது. ஒவ்வொரு வாரமும் நடந்த சுதேசியர்களின் முக்கிய நடவடிக்கைகளை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதினார்.

இந்நிலையில் அருண்டேல் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப் படாததால் பல்வேறு விவாதங்கள் பத்திரிக்கைகளில் நடந்து வந்தன. அதுவுமின்றி ஒவ்வொரு வகுப்பும் கோரிக்கை மனுக்களை பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பிக் கொண்டிருந்தன. எனவே பண்டிதர் தலைமையிலான திராவிட மகாஜன சபை 1908ம் ஆண்டு தொடக்கத்தில் கூடி நடந்து கொண்டிருக்கும் போக்கை விவாதித்து தம்முடைய கோரிக்கைகளை மனுவாக கவர்னருக்கு அளிக்க முடிவு செய்தது. மனுவை பண்டிதர் தயார் செய்தார். அதில்,

மாகாண சட்ட சபைகளில் இக்குலத்தாரைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு யுரேஷியரையோ அல்லது ஐரோப்பியரையோ நியமனம் செய்ய வேண்டும்.

அரசுப் பணிகளில் இக்குலத்தோரை நியமனம் செய்து இடுக் கண்களைக் களைய வேண்டும். (1:222)

என்ற முக்கிய கோரிக்கைகளோடு இன்னும் சில கோரிக்கைகளையும் அதில் கேட்டிருந்தார். மாகாண சட்ட சபைகளில் தாழ்த்தப் பட்டோருக்கு பேச யுரேஷியரை அல்லது ஐரோப்பியரை கேட்டதற்கு காரணம் அப்போது பேசப்பட்டு வந்த தேர்தல் முறைதான். ஏனெனில் அறிமுகப் படுத்தப் படவிருக்கும் தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கு வாக்குரிமை கிடைக்காது என்பது பேச்சாயிருந்த படியாலும், அது சொத்துள் ளவர்களுக்கே உள்ள உரிமை என்றும் பேச்சாயிருந்தது. அப்படியின்றி நியமனம் மூலமாக நியமிப்பதானால் இக்குலத்தை சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும்" என்றும் பண்டிதர் மனுவில் கேட்டுக் கொண்டார்.

இப்படி தயாரிக்கப்பட்ட மனுவில், அரசு அலுவலக ஊழியர்கள், கம்பெனியின் ரயில்வே இல்லம், தலைமை அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட இன ஊழியர்கள், மற்றும் இவ்வினத்தில் உள்ள கனதன வியாபாரிகள், காண்ட்ராக்டர்கள், பட்டதாரர்கள், அரண் மனை அலுவலர்கள், என பணிபுரிந்த 2173 தலித்துகளிடம் கையொப்பம் பெற்று அந்த மனுவை சாதிபேதமற்ற திராவிட மகாஜன சபையின் மூலம் சென்னை மாகாண கவர்னரிடம் கொடுத்தார்கள். (1:114)

மனுவைப் பெற்றுக் கொண்ட கவர்னர் அதை இங்கிலாந்திலுள்ள பேரரசருக்கும், இந்திய வைஸ்ராய் மிண்டோவிற்கும், இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கும் அனுப்பினார்.

இந்த மனுவின் மீது விசாரணை நடைபெற்றது. அதற்கு சாதகமான பதில் கிடைப்பதாகத் தோன்றியது. இந்திய அரசுக்கும் - இங்கிலாந்து அரசுக்கும் நடந்த கடிதப் போக்குவரத்துகளில் இது தெரிந்தது. இந்த நல்ல செய்தி குறித்து 1908 மே மாதம் 13ம் தேதி தமிழனில் சுதேசி போலிகளை எதிர்த்து எழுதி, அவர்களது சுயராஜ்ஜிய கோரிக்கைகள் ஏற்கப்படாது என்றும், தங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படும் என்பதை விளக்கி

"அவர்கள் சீர்மையிலிருந்து விட்டிருக்கும் கவுன்சில் மெம்பர்கள் என்னும் (நீராஸ்திரமானது) யூரேஷியர்கள், மகமதியர்கள், நேட்டிவ் கிறிஸ்தவர்கள், சாதிபேதமில்லா திராவிடர்கள் இந்நான்கு கூட்டத்தாரை மனதையுங் குளிரவைத்து மறுபடியும் சீர்மைக்கு போயிருக்கிறது. அத்தகைய விவேகமிகுந்த நீராஸ்த்திரத்தால் குளிர்ந்துள்ள யூரேஷியர், மகமதியர், நேட்டிவ் கிறித்தவர், சாதி பேதமில்லா திராவிடர்களாகியப் பெருங் கூட்டத்தார் முன்பு உங்கள் அக்கினியாஸ்திரம் வீசுமோ, உங்கள் சுதேசியம் எனும் வார்த்தை நிலைக்குமோ ஒரு காலுமில்லை." (1:50)

பண்டிதரின் இந்த கருத்தின்படி, அன்றைக்கு சாதிபேதமற்ற திராவிட மகாஜன சபை மூலம் கொடுத்த மனு மீதான விசாரணைகள் நம்பிக்கை யூட்டக் கூடியதாகவே இருந்தது.

இந்த சூழலில் சீர்த்திருத்த கருத்துக்களில் தாக்கம் பெற்று பரோடா அரசர் கெய்க்வாட் தம்முடைய சமஸ்தானத்தில் தீண்டத்தகாத மக்களில் படித்த மாணவர்களுக்கு உபகார சம்பளம், பணிகளில் சில ஒதுக்கீடு என்ற நடைமுறையை கொண்டு வந்தார். இந்த முயற்சியை பாராட்டி பண்டிதர் 1908, ஜூலை மாதம் 6ம் நாள் இதழில் கவிதையையும் ஒரு குறிப்பும் எழுதினார்.

எனவே பண்டிதர் தம்முடைய இடஒதுக்கீடு குறித்த கருத்தில் தெளிவாகவும், அதே நேரம் அக்கருத்துக்கு ஆதரவான சூழல் எங்கு நில வினாலும் அதை ஆதரிக்கவும் செய்தார். இக்காலகட்டத்தில் சமூக அரசியல் நிலைமை தீவிரம் அடைந்து கொண்டிருந்தது. மார்லியவர் களின் திட்டத்தை வெளிப்படையாக அறிந்து கொள்ள எல்லோரும் ஆவ லாய் இருந்தார்கள்.

இந்த எதிர்பார்ப்புகள் நிறைந்த சூழலில், தேசிய தொழில் நிதிய கூட்டமைப்பு (National Industrial fund Assn) அமைப்பிடமிருந்து 1908, செப்டம்பர் 24ம் தேதி மூன்று கடிதங்கள் பண்டிதருக்கு வந்தது. அக்கடிதத்தில்

"வருகிற தீபாவளியன்று சகலரிடத்திலும் பணம் வசூல் செய்து மேற்கண்டபடி பண்டில் சேர்த்து கைத்தொழில்களை விருத்தி செய்ய வேண்டுமென்றும் அதில் இராயப்பேட்டை கிளையோராக நின்று பணம் சேகரிப்பதற்கு

ம - அ - அ -ஸ்ரீ

ஜி. நாராயண செட்டிகாரு

எஸ். கஸ்துரி ரங்க ஐயங்காரவர்கள், பி.ஏ.பி.எல்,,

ஏ. அரங்கசாமி ஐயங்கார். பி.ஏ.

க. அயோத்திதாசர் அவர்கள்

வி. திருவேங்கடாச்சாரியவர்கள் . பி.ஏ, பிஎல் (1:78)

ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவிற்கு உள்ள கடமைகளும் விளக்கப்பட்டிருந்தன. கடிதத்தின் கோரிக்கைகளைப் பற்றி விரிவாக அலச சாதி பேதமற்ற திராவிட மகாஜன சபையின் முக்கிய அங்கத்தினர்கள் கூட்டப்பட்டு கடிதம் அவர்கள் முன் வைக்கப்பட்டு தீர ஆலோசனை செய்தார் பண்டிதர்.

அந்த ஆலோசனையில் உறுதி செய்யப்பட்ட விவரங்களை பண்டிதர் குறிப்பிட்டார். அதில்

அந்த இஸ்டஸ்ட்ரியல் பண்டு நிறுவனத்தில் - அச்சங்க உத்யோகத்தில்

பிராமணர்கள் 14 பேர்
செட்டியார் 1 நபர்
முதலியார் 1 நபர்
மகமதியர் 1 நபர்
நாயுடு 3 பேர்
என பலர் சமூகத்தவர்களின் பிரதிநிதித்துவம் இருந்தது. இதில் பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் விலகி விட்டால் அந்த சங்கம் பிராமணர்கள் சங்கமாகவே எஞ்சிவிடும். எனவே தன்னுடைய இட ஒதுக் கீட்டு திட்டத்தை பண்டிதர் முன்வைத்தார்.

அதில்,

ஐயா,

தங்களுடைய கூட்டத்தார் விஷயமாக அந்தரங்கத்தில் பெருந்தொகையார் ஆலோசனையும், பகிரங்கத்தில் சிறுந் தொகையார் ஆட்சேபனையும் இருக்கிறது.

1. ஆட்சேபணை;

இக்கூட்டத்தில் சேர்ந்திருப்பவர்கள் பெருந்தொகை பிராமணர் களாய் இருப்பதினாலேயாம்.

இக்கூட்டம் எப்போது நாஷனாலாக ஏற்பட்டதோ அதன் அங்கங்களும் அப்படியாகவே இருத்தல் வேண்டும்.

அதாவது, பிரசிடெண்டுகளில்

பிராமணர் 1 நபர்
யுரேஷியர் 1 நபர்
மகமதியர் 1 நபர்

இருந்து காரியங்களை சமயம்போல் நடத்தி வரவேண்டியது. செக்ரட்டரிகளிலும், டிரஷரர்களிலும் (Secretary, Treasures)

பிராமணர் 1 நபர்
நான் பிராமின் 1 நபர்
மகமதியர் 1 நபர்

ஆக மூன்றுபேர் பொக்கிஷம் வைக்கவும், வாங்கவும் இருத்தல் வேண்டியது. டைரக்டர்களில் :

பிராமணர் 4 பேர்
யுரேஷியர் 4 பேர்
நான் பிராமின் 4 பேர்
மகமதியர்கள் 4 பேர்
சாதிபேதமற்ற திராவிடர் 4 பேர்

என இருத்தல் வேண்டும். மேலும்,

- அந்தந்த வகுப்பாருள் நான்கு பிள்ளைகளை அவரவர்கள் கற்கக்கூடிய வித்தைகளை கற்பிக்க பண உதவி செய்ய வேண்டியது.

- கற்றுக் கொள்ளும் பிள்ளைகளில் யாதொரு பேதமில்லாமல் தொழில் அளித்து வேலைகள் கொடுத்து சீவிக்க செய்ய வேண்டியது.

- தீபாவளிக்கு முன்பே இத்தகையக் கூட்டத்தாரை பயிரங்கத்தில் நியமித்து நோட்டீசுகள் அச்சிட்டு வெளியிடுவீர்களானால் எங்களால் கூடிய முயற்சிகளை நாங்கள் எடுத்துக் கொள்ளக் கூடும். (I-79)

என பண்டிதர் முன்வைத்த இந்த விகித்தாச்சார திட்டத்திற்கு அந்த நிறுவனத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனினும் இந்த திட்டத்தில் மூன்று விஷயங்களை பண்டிதர் தெளிவாக்கியுள்ளார். அவை

  1. விகிதாச்சார இடஒதுக்கீடு
  2. உபகார சம்பளம் (Scholarships)
  3. படிப்பிற்கேற்ற வேலை

எனவே விகிதாச்சார உரிமை எனும் இடஒதுக்கீட்டின் முழுவடிவம் பண்டிதரால் அடையாளப்படுத்தப்பட்டு விட்டது. மேலும், அரசியல் தளத்தில் இதை பொருத்தி பார்ப்பதற்கான சந்தர்ப்பம் விரைவிலேயே வாய்த்தது. அதற்கு முன்பு கவர்னர் அவர்களிடம் அளித்த மனுமீது நடைபெற்ற விசாரணையின் விளைவாக நல்ல செய்தியொன்று கிடைத்தது. அது என்ன செய்தி?

 
கௌதம சன்னா / 34