பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

முகவுரை[தொகு]

இவ்வுலகில் எத்தனையோ நாகரிகங்கள் சொல்லப்படினும், அவையெல்லாம் கீழை நாகரிகம், மேலை நாகரிகம் என இரண்டாய் அடங்கும். இவ்விரண்டுள், முன்னது முந்தியது:தமிழரது; பின்னது பிந்தியது;ஆங்கிலரது.

மேம்சு வாட்டு (James Watt) என்னும் ஆங்கிலேயர் 1765ஆம் ஆண்டு நீராவிச் சூழ்ச்சியத்தைக் கண்டுபிடித்ததிலிருந்து, தற்கால நாகரிகம் தொடங்குகிறது. அதற்கு முந்தியதெல்லாம் முற்கால நாகரிகமாகும் . இன்று புகைவண்டி பல நாடுகளிற் செய்யப்படினும், முதன் முதலாய்ச் செய்யப் பெற்ற ஆங்கிலநாட்டு வண்டியே அவற்றிற்கெல்லாம் மூலமாகும். அதுபோன்றே, நாற்றிசையிலும் பல்வேறு நாடுகளில் பழங்கால் நாகரிகம் இருந்திருப்பினும், அவற்றிற் கெல்லாம் தமிழ நாகரிகமே மூலமாகும்.

நீராவியும் மின்னாற்றலுங் கொண்டு செய்யப்பெறும் பொறி (Machine)வினைச் சூழ்ச்சிய (Engine) வினையும் இக்கால் நாகரிகமென்றும்; கையாலும் விலங்காலுமே செய்யப்பட்ட வேலைப்பாடு முற்கால நாகரிகம் என்றும், வேறுபாடறிதல் வேண்டும்.

சிலர், தற்புகழ்ச்சி பற்றி, நாகரிகம் என்னும் சொல்லை எளிதாகவும் குருகிய நோக்கோடும் ஆள்வர். இட வேறுபாடும் மொழி வேறுபாடும் பற்றி நாகரிகம் பல்வேறு வகைப்பட்டுவிடாது. ஒவ்வொரு நாட்டரசாட்சியும் ஒரு தனி நாகரிகமன்று. மேனாடுகளுள் முதன்முதல் நாகரிகமடைந்தது எகிபது (Egypt) அதன் தொடக்கம் கி.மு.4000 ஆண்டுகட்குமுன், அதற்கும் முந்தியது தமிழ் நாகரிகம். அதன் தோற்றம் கி.மு.10,000 ஆண்டுகட்குமுன். ஆகவே, தமிழ் நாகரிகமே உலகில் முதன்முதல் தோன்றியதாகும். தமிழின் முதுபழந் தொன்மையும், தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டம் என்னும் உண்மையும் இதை வலியுறுத்தும்.

இங்ஙனமிருப்பவும், ஆரியச் சூழ்ச்சியாலும் ஆரிய வ்ரிகைக்குப் பிற்பட்ட மூவேந்தரின் பேதைமையாலும், பல்வகைப்பட்ட கொண்டான்மாரின் (வையாபுரிகள்) காட்டிக் கொடுப்பாலும், தமிழ் நாகரிகம் மேனாட்டார்க்குத் தெரிந்த அள்வுகூடத் தமிழர்க்குத் தெரியாது மறையுண்டு கிடக்கின்றது. இவ்விரங்கத்தக்க நிலைமை தமிழரின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாய் இருத்தலால், இதை நீக்குதற் பொருட்டு இந் நூலை எழுதத் துணிந்தேன். இற்றைத் தமிழருள் நூற்றிற் கெண்பதின்மர் தற்குறிகளும் தாய்மொழியுணர்ச்சி யில்லாதவருமாயிருப்பினும், புதுத் தலைமுறையாக முளைவிட்டு கிளர்ந்தெழும் தமிழ நாகரிகப் பண்பாட்டைப் புதுக்கிப் போற்றிக் காப்பாராக.

இந்நூல் ஆரியர் வருகைக்கு முற்பட்ட தமிழ நாகரிகத்தையே கூறுவதாயிருப்பினும், முதலிரு கழக நூல்களும் அழிந்தும் அழியுண்டும் போனமையாலும், முதற்கால நாகரிகத் தொடர்ச்சியே பிற்கால நாகரிகமுமாதலாலும், இலக்கியச் சான்றுகளெல்லாம் பிற்கால நூல்களினின்றும் கல்வெட்டுக் களினின்றுமே காட்டப் பெறும் என அறிக.

இந்நூலை இயன்ற விரைவில் சீருஞ் செவ்வையுமாக அச்சிட்டுத்தந்த சீவன் அச்சகத்தார்க்கு நெஞ்சார நன்றி கூறுகின்றேன்.


அல்லும் பகலும் அருணா சலமென்னும்

நல்லிறையன் மெய்ப்பு நவைநீங்க - ஒல்லும்

வகையால் திருந்திய வாறன்றோ இந்நூல்

தகையால் விளங்குந் தகை.

காட்டுப் பாடி,

1997.

                                                        ஞா.தேவநேயன்.

முன்னுரை[தொகு]

1. நாகரிகம் என்னும் சொல்விளக்கம்

நாகரிகம் என்பது நகர மக்களின் திருந்திய வாழ்க்கை. நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லின் திரிபாகும். (நகர் + அகம் = நகரகம். நகரகம் - நகரிகம் - நாகரிகம்) எல்லா நாட்டிலும் மாந்தர் முதன்முதல் நகரப் பெயரினின்று நாகரிகப் பெயர் தோன்றியுள்ளது. சிற்றூர்கட்கும் நகரங்கட்கும் எவ்வளவோ தொடர்பேற்பட்டுள்ள இக்காலத்தும், நாகரிகமில்லாதவன் நாட்டுப்புறத்தான் என்றும் பட்டிக்காட்டான் என்றும் இழித்துக் கூறுதல் காண்க. நகரப்பதி வாழ்நர் என்னும் சொல் நாகரிகமுள்ளோரைக் குறிக்கும் இலக்கிய வழக்கையும் நோக்குக.


ஆங்கிலத்திலும், நாகரிகத்தைக் குறிக்கும் இலத்தீன் சொல் நகர்ப் பெயரினின்று தோன்றியதே.L.civitas, city or city - civis citizen, L. civilis - E.civil - civilize


நகரங்கள் முதன்முதல் தோன்றியது உழவுத்தொழிற்குச் சிறந்த மருதநிலத்திலேயே. உழவுத்தொழிலும் நிலையான குடியிருப்பும் ஊர்ப்பெருக்கமும் நாகரிகம் தோன்றுவதற்குப் பெரிதும் துணைசெய்தன. உழவுத் தொழிலால் வேளாண்மையும், பதினெண் பக்கத் தொழில்களும், பிறதொழில் செய்வார்க்கும் போதியவுணவும், வாணிகமும் ஏற்பட்டன. நிலையாகக் குடியிருப்பதனால் உழவன் குடியானவன் என்னைப் பெற்றான். இல்வாழ்வான் என்று திருவள்ளுவராற் சிறப்பித்துச் சொல்லப் பெற்றவனும் உழவனே. இல்வாழ்வானைக் குறிக்கும் என்னும் பழ நார்வேயச் சொல்லினின்றும் உழு அல்லது பயிர்செய் என்று முன்பு பொருள்பட்ட என்னும் பெயர்ச் சொல்லும், உழவுத்தொழிலைக் குறிக்கும் என்னும் தொழிற்பெயரும், ஆங்கிலத்தில் தோன்றியிருப்பது இங்குக் கவனிக்கத் தக்கது.நிலையான குடியிருப்பால் ஒழுக்கப் பொறுப்பும் , ஊர்ப் பெருக்கமும் ஆட்சியமைப்பும் ஏற்பட்டன. இதனால், மருதநிலமும் உழவுத் தொழிலும் எங்ஙனம் நாகரிகத்தைத் தோற்றுவித்தன என்பது தெளிவாகும்.


நகர் என்னும் சொல், முதன்முதல், ஒரு வளமனையை அல்லது மாளிகையையே குறித்தது.

  நகர் = 1.வளமனை

"கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்" (புறம்.70)

      2. மாளிகை.

"பாழி யன்ன கடியுடை வியனகர்" (அகம்.15)


மாளிகை அரசனுக்கே சிறப்பாக வுரியதாதலால், நகர் என்னும் சொல் அரண்மனையையும் அரசன் மனை போன்ற இறைவன் கோயிலையும் பின்பு குறிக்கலாயிற்று.


 நகர் = 1.அரண்மனை


"முரைசுகெழு செல்வர் நகர்" (புறம்127)


"நிதிதுஞ்சு வியனகர்" (சிலப்.27:200)


"முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே" (புறம்.6)


"உத்தர கோசமங்கை மின்னேறு மாட வியன்மா ளிகைபாடி" (திருவாச.16:3)

என்பதால், கோயிலுக்கும் மாளிகைப் பெயருண்மை அறியலாம்.

சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெரும் மண்டபம் மாளிகை போன்றிருத்தலால், திருத்தக்கதேவர் நகர் என்னும் சொல்லை மண்டபம் என்னும் பொருளில் ஆண்டார்.


"அணிநகர் முன்னி னானே" (சீவக.701)


நகர் என்னும் சொல் ம்னையைக் குறித்தலாலேயே மனை, இல், குடி என்னும் சொற்கள் போல் இடவாகு பெயராய் மனைவியையும் குறிக்கலாயிற்று.


 நகர் = மனைவி 

"வருவிருந் தோம்பித் தன்னகர் விழையக் கூடி" (கலித்.8)


சிறந்த ஓவிய வேலைப்பாடமைந்த சிப்பிச் சுண்ணாம்புச் சாந்தினால் தீற்றப்பெற்று வெள்ளையடிக்கப்பட்ட கரைச்சுவர்க் கட்டடம், மண்சுவர்க் கூரை வீட்டோடு ஒப்பு நோக்கும்போது, மிக விளங்கித் தோன்றலால், மாளிகை நகர் என்னப்பட்டது. நகுதல் விளங்குதல் நகு - நகல் - நகர். வெண்பல்லையும் பொன்மணியணி கலத்தையும் முகமலர்ச்சியாகிய சிரிப்பையும் உணர்த்தும். நகை என்னும் சொல்லை நோக்குக.நகு - நகை.


                                                     தொடரும்................