உள்ளடக்கத்துக்குச் செல்

பத்திரகிரியார்

விக்கிமூலம் இலிருந்து

பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் paatal matrum porul

  • பக்கம் 1-10

காப்பு

[தொகு]
முத்திதரும் ஞான மொழியாம் பலம்பல் சொல்ல
அத்திமுகவன்தன் அருள் பெறுவது எக்காலம்

நூல்

1 - 10

[தொகு]

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம் (1)

நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம் (2)

தேங்காக் கருணை வெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு
வாங்காமல் விட்டகுறை வந்தடுப்பது எக்காலம் (3)

ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்
மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம் (4)

மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயா புரிக்கோட்டை கைக் கொள்வது எக்காலம் (5)

காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு
மாயா அனுபூதி வந்து அடுப்பது எக்காலம் (6)

சேயாய்ச் சமைந்து செவிடு ஊமை போல் திரிந்து
பேய்போல் இருந்து உன் பிரமை கொள்வது எக்காலம் (7)

பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத்
தாய்போல் நினைத்துத் தவம் முடிப்பது எக்காலம் (8)

கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி
மால் காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம் (9)

பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழிந்து
கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்பது எக்காலம் (10)

வெட்டுண்ட புண்போல்விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம் (11)

ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவதும் எக்காலம் (12)

தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம் (13)

மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்
தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம் (14)

பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம் (15)

உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம் (16)

வேடிக்கையும் சொகுசும் மெய்ப் பகட்டும் பொய்ப் பகட்டும்
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம் (17)

பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவதும் எக்காலம் (18)

ஆமை வரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம் (19)

தண்டிகையும் சாவடியும் சாளிகையும் மாளிகையும்
கண்டு களிக்கும் கருத்தொழிவது எக்காலம் (20)

அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம்
செத்த சவம் போல் திரிவதினி எக்காலம் (21)

ஒழிந்த தருமத்தினை வைத்துள்ளெலும்பு வெள்ளெலும்பாய்க்
கழிந்த பிணம் போல் இருந்து காண்பதினி எக்காலம் (22)

அற்ப சுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து
கெர்ப்பத்தில் வீழ்ந்து கொண்ட கோளறுப்பது எக்காலம் (23)

கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம் (24)

தூண்டு விளக்கணைய தொடர்ந்து இருள்முன் சூழ்ந்தாற்போல்
மாண்டு பிழைத்துவந்த வகை தெரிவது எக்காலம் (25)

தூரியினின் மீன்போல் சுழன்று மனம் வாடாமல்
ஆரியனைத் தேடி அடிபணிவது எக்காலம் (26)

எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத வீடுபெற
வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம் (27)

அவ்வேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல்
சிவ்வேடம் பூண்டு சிறந்திருப்பது எக்காலம் (28)

அண்டருக்காய் நஞ்சருந்தி அம்பலத்தில் ஆடுசிவன்
தொண்டருக்குத் தொண்டன் எனத் தொண்டு செய்வது எக்காலம் (29)

பன்றி வடிவெடுத்துப் பார் இடந்து மால் காணாக்
குன்றில் விளக்கொளியைக் கூறுவதும் எக்காலம் (30)

தித்திக்கும் தெள்ளமிர்தை சித்தாந்தத்து உட்பொருளை
முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம் (31)

வேதாந்த வேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம் (32)

மற்றிடத்தைத் தேடி என்றன் வாழ்நாளைப் போக்காமல்
உற்றிடத்தைத் தேடி உறங்குவதும் எக்காலம் (33)

இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே
மன்றுளோர் சொல்லும் வகையறிவது எக்காலம் (34)

கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்
பஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம் (35)

செஞ்சலத்தினால் திரண்ட ஜெனன மோ க்ஷம்பெறவே
சஞ்சலத்தை விட்டு உன் சரண் அடைவது எக்காலம் (36)

கும்பிக்கு இரைதேடிக் கொடுப்பார் இடம்தோறும்
வெம்பித் திரிகை விடுப்பது இனி எக்காலம் (37)

ஆடுகின்ற சூத்திரம் தான் அறுமளவு மேதிரிந்து
போடுகின்ற நாள்வருமுன் போற்றுவதும் எக்காலம் (38)

நவசூத் திர வீட்டை நான் என்று அலையாமல்
சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவது எக்காலம் (39)

மறந்து மல சலங்கள் மாயும் புழுக் கூட்டை விட்டுக்
கரந்துன் அடி இணைக்கீழ்க் கலந்துநிற்பது எக்காலம் (40)

==41-50==

இம்மைதனில் பாதகனாய் இருவினைக்கீடாய் எடுத்த
பொம்மைதனைப் போட்டு உன்னைப் போற்றிநிற்பது எக்காலம் (41)

உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக் கொள்ளுமுன்னே
அப்பிட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம் (42)

சேவை புரிந்து சிவரூபக் காட்சிகண்டு
பாவைதனைக் கழித்துப் பயன் அடைவது எக்காலம் (43)

காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டது போல்
பாண்டத்தை நீக்கிப் பரம்அடைவது எக்காலம் (44)

சோற்றுத் துருத்திதனைச் சுமந்து அலைந்து வாடாமல்
ஊத்தைச் சடம்போட்டு உனை அடைவது எக்காலம் (45)

தொடக்கைச் சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல்
உடக்கை கழற்றி உனை அறிவது எக்காலம் (46)

ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் (47)

கூற அரிய நூல் வேதம் கூப்பிட்டும் காணாத
பார ரகசியத்தைப் பார்த்திருப்பது எக்காலம் (48)

புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம் (49)

தக்கும்வகைக்கு ஓர் பொருளும் சாராக லேநினைவில்
பக்குவம்வந்து உன் அருளைப் பார்த்திருப்பது எக்காலம் (50)

பருவத் தலைவரொடும் புல்கிஇன்பம் கொள்வதற்குத்
தெரிவைப் பருவம் வந்து சிக்குவதும் எக்காலம் (51)

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டு எல்லாம் அறிந்து
குருவை அறிந் தேநினைத்துக் கும்பிடுவது எக்காலம் (52)

வம்படிக்கும் மாதருடன்வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல் ஆவதினி எக்காலம் (53)

பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல்
சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது எக்காலம் (54)

சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்
சொல்லாரக் கண்டு எனக்குச் சொல்வதினி எக்காலம் (55)

மருவ அயல்புருடன் வரும் நேரம் காணாமல்
உருகுமனம் போல் என் உளம் உருகுவதும் எக்காலம் (56)

தன்கணவன் தன் சுகத்தில் தன்மனம் வே றானது போல்
என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம் (57)

கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல்
தேடித் தவிப்பவன் போல் சிந்தை வைப்பது எக்காலம் (58)

எவ்வனத்தின் மோகம் எப்படி யுண்டப்படி போல்
கவ்வனத் தியானம் கருத்து வைப்பது எக்காலம் (59)

கண்ணால் அருவி கசிந்து முத்துப் போல் உதிரச்
சொன்ன பரம் பொருளைத் தொகுத்தறிவது எக்காலம் (60)

ஆக மிகவுருக அன்புருக என்புருகப்
போக அனுபூதி பொருந்துவதும் எக்காலம் (61)

நீரில் குமிழி போல் நிலையற்ற வாழ்வை விட்டுன்
பேரில் கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம் (62)

அன்பை உருக்கி அறிவை அதன் மேல் புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடக்கறுப்பது எக்காலம் (63)

கருவின் வழி அறிந்து கருத்தைச் செலுத்தாமல்
அருவி விழிசொரிய அன்பு வைப்பது எக்காலம் (64)

தெள்ளத் தெளிய தெளிந்த சிவானந்தத்தேன்
பொழியப் பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம் (65)

ஆதார மூலத்தடியில் கணபதியைப்
பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம் (66)

மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்
கண் வளர்த்து பார்த்துள்ளே கண்டிருப்பது எக்காலம் (67)

அப்புப் பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை
உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவது எக்காலம் (68)

மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம் (69)

வாயு அறு கோணம் அதில் வாழும் மகேச்சுரனைத்
தோயும் வகை கேட்கத் தொடங்குவதும் எக்காலம் (70)

வட்ட வழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம் (71)

உச்சிக் கிடை நடுவே ஓங்கும் குருபதத்தை
நிச்சயித்துக் கொண்டிருந்து நோவதினி எக்காலம் (72)

பாராகிப் பார்மீதில் பஞ்சவர்னம் தானாகி
வேறாகி நீ முளைத்த வித்தறிவது எக்காலம் (73)

கட்டறுக்க வொண்ணாக்கருவிகர ணாதி எல்லாம்
சுட்டறுத்து நிட்டையிலே தூங்குவதும் எக்காலம் (74)

கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம் (75)

அட்டகாசம் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே
பட்டபாடு அத்தனையும் பகுத்தறிவது எக்காலம் (76)

அறிவுக் கருவியுடன் அவத்தைபடும் பாட்டை எல்லாம்
பிரிய உடன் இருத்திப் பெலப்படுவது எக்காலம் (77)

பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமுமாய்ப்
பேதம் பலவிதமும் பிரித்தறிவது எக்காலம் (78)

தோன்றாசை மூன்றும் தொடர்ந்து வந்து சுற்றாமல்
ஊன்றாசை வேரை அடி ஊடறுப்பது எக்காலம் (79)

புன்சனனம் போற்றுமுன்னே புரிவட்டம் போகில் இனி
என் சனனம் ஈடேறும் என்றறிவது எக்காலம் (80)

நட்ட நடுவில் நின்று நல்திரோ தாயி அருள்
கிட்டவழி காட்டிக் கிருபை செய்வது எக்காலம் (81)

நானே நான் என்றிருந்தேன் நடுவினில் கட்டழகி
தானே வெளிப்படுத்தித் தருவன் என்பது எக்காலம் (82)

அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவது இனி எக்காலம் (83)

ஐந்து பொறிவழிபோய் அலைத்தும் இந்தப் பாழ்மனதை
வெந்து விழப் பார்த்து விழிப்பது இனி எக்காலம் (84)

இனம்மாண்டு சேர்ந்திருந்தோர் எல்லோரும் தான் மாண்டு
சினம்மாண்டு போக அருள் சேர்ந்திருப்பது எக்காலம் (85)

அமையா மனது அமையும் ஆனந்த வீடுகண்டு அங்கு
இமையாமல் நோக்கி இருப்பது இனி எக்காலம் (86)

கூண்டு விழும் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற் போல்
மாண்டு விழும் முன்னே நான் மாண்டிருப்பது எக்காலம் (87)

ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகுமுன்னம்
நான் இறந்து போக இனி நாள் வருவது எக்காலம் (88)

கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்து
சுட்டு விடுமுன் என்னைச் சுட்டிருப்பது எக்காலம் (89)

தோல் ஏணி வைத்தேறித் தூர நடந் தெய்க்காமல்
நூல் ஏணி வைத்தேறி நோக்குவதும் எக்காலம் (90)

91-100

[தொகு]

வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்
தாயோடு கண்மூடி தழுவி நிற்பது எக்காலம் (91)

காசினியெல்லாம் நடந்து கால் ஓய்ந்து போகாமல்
வாசிதனில் ஏறிவருவது இனி எக்காலம் (92)

ஒலிபடரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பிச்
சுழுமுனையின் தாள்திறந்து தூண்டுவதும் எக்காலம் (93)

இடைபிங் கலைநடுவே இயங்கும் சுழுமுனையில்
தடை அறவே நின்று சலித்திருப்பது எக்காலம் (94)

மூல நெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தில்
பாலை இறக்கி பசி ஒழிவது எக்காலம் (95)

ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவி செல்ல
ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம் (96)

பஞ்சரித்துப் பேசும்பல கலைக்கு எட்டாப் பொருளில்
சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம் (97)

மலமும் சலமும் அற்று மாயை அற்று மானம் அற்று
நலமும் குருவும் அற்று நான் இருப்பது எக்காலம் (98)

ஓடாமல் ஓடி உலகை வலம் வந்து சுற்றித்
தேடாமல் என்னிடமாய்த் தெரிசிப்பது எக்காலம் (99)

அஞ்ஞானம் விட்டே அருள் ஞானத்து எல்லை தொட்டு
மெய்ஞான வீடு பெற்று வெளிப்படுவது எக்காலம் (100)

101-110

[தொகு]

வெல்லுமட்டும் பார்த்து வெகுளியெலாம விட்டு அகன்று
செல்லுமட்டும் சிந்தை செலுத்துவது எக்காலம் (101)

மேலாம் பதம் தேடி மெய்ப்பொருளை உள் இருத்தி
நாலாம் பதம் தேடி நான் பெறுவது எக்காலம் (102)

எண்ணாத தூரம் எல்லாம் எண்ணி எண்ணி பாராமல்
கண்ணாடிக்குள் ஒளி போல் கண்டறிவது எக்காலம் (103)

என்னை அறிந்து கொண்டே எங்கோ மானோடு இருக்கும்
தன்மை அறிந்து சமைந்திருப்பது எக்காலம் (104)

ஆறு ஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை
பேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம் (105)

ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகாமுன்
காணுதலால் இன்பமற்றுக் கண்டறிவது எக்காலம் (106)

மும்மலமும் சேர்த்து முளைத்தெழுந்த காயம் இதை
நிர்மலமாய்க் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம் (107)

முன்னை வினை கெடவே மூன்று வகைக் காட்சியினால்
உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம் (108)

கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும்
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவது எக்காலம் (109)

கனவு கண்டால்போல் எனக்குக் காட்டி மறைத்தே இருக்க
நினைவைப் பரவெளிமேல் நிறுத்துவது எக்காலம் (110)

111-120

[தொகு]

ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும்
பார் என்று சொன்னதுவும் பகுத்தறிவது எக்காலம் (111)

நினைக்கும் நினைவுதோறும் நிறைந்த பரிபூரணத்தை
முனைக்குமேல் கண்டு கண்ணில் முளைந்தெழுப்பது எக்காலம் (112)

முப்பாழும் பாழாய் முதற்பாழும் சூனியமாய்
அப்பாழும் பாழாய் அன்பு செய்வது எக்காலம் (113)

சீ என்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை
நீ என்று கண்டு நிலை பெறுவது எக்காலம் (114)

வவ்வெழுத்தும் அவ்வெழுத்தும் வாளாகும் சிவ்வெழுத்தும்
யவ்வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம் (115)

எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமாய்ச் சிந்தையை வைத்து அன்பு கொள்வது எக்காலம் (116)

அருவாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற
குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம் (117)

நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம்
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம் (118)

என் மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்தபின்பு
தன் மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம் (119)

ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறது போல்
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம் (120)

121-130

[தொகு]

ஒளிஇட்ட மெய்ப்பொருளை உள் வழியிலே அடைத்து
வெளியிட்டுச் சாத்திவைத்து வீடு உறுவது எக்காலம் (121)

காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டது போல்
பாய்ந்து பிடித்திழுத்து உன் பதத்தில் வைப்பது எக்காலம் (122)

பித்தாயம் கொண்டு பிரணவத்தை ஊடறுத்துச்
செத்தாரைப் போலே திரிவது இனி எக்காலம் (123)

ஒழிந்த கருத்தினை வைத்து உள்எலும்பு வெள் எலும்பாய்
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் (124)

ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் (125)

சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிடக் காற்று
ஊதும் துருத்தியைப் போட்டு உனை அடைவது எக்காலம் (126)

ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் (127)

கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப்
புல்லாய்ப் பிறந்த சென்மம் போதும் என்பது எக்காலம் (128)

தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்
பக்குவமாய் நின் அருளைப் பார்த்திருப்பது எக்காலம் (129)

தூறோடு இசைந்து சிழன்று வரும் தத்துவத்தை
வேறோடு இசைந்து விளங்குவதும் எக்காலம் (130)

131-140

[தொகு]

பாசம் நடு ஏறிப் பயந்தெழுந்த சித்திரத்தை
ஏகநடு மூலத்து இருத்துவதும் எக்காலம் (131)

ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று
பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்பது எக்காலம் (132)

காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்ததெல்லாம்
பூரணமாக் கண்டு புகழ்திருப்பது எக்காலம் (133)

ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின்
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம் (134)

குறியாகக் கொண்டு குலம் அளித்த நாயகனைப்
பிரியாமல் சேர்ந்து பிறப்பறுப்பது எக்காலம் (135)

மத்தடுத்து நின்று மருள் ஆடு வார் போல
பித்தடுத்து நின் அருளைப் பெற்றிருப்பது எக்காலம் (136)

சாவாமல் செத்திருந்து சற்குருவின் பான் அடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம் (137)

என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திரநின்
தன்னை அறிந்து தவம் பெறுவது எக்காலம் (138)

உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
கள்ள மனம் தெளிந்து காண்பது இனி எக்காலம் (139)

வாசித்தும் காணாமல் வாய்விட்டும் போகாமல்
பூசித்தும் தோன்றாப் பொருள் காண்பது எக்காலம் (140)

141-150

[தொகு]

பன்னிரண்டு கால்புரவி பாய்ந்துசில்லம் தப்பாமல்
பின் இரண்டு சங்கிலிக்குள் பிணைப்பது இனி எக்காலம் (141)

நாட்டுக்கால் இரண்டும்விட்டு நடுவுக்கால் ஊடேபோய்
ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம் (142)

பாற்பசுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக்
காற்பசுவை ஓட்டி அதில் கட்டி வைப்பது எக்காலம் (143)

பல இடத்தே மனதைப் பாயவிட்டுப் பாராமல்
நிலவரையின் ஊடே போய் நேர்படுவது எக்காலம் (144)

காமக் கடல்கடந்து கரைஏறிப் போவதற்கே
ஓமக் கனல்வளர்த்தி உள்ளிருப்பது எக்காலம் (145)

உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி
இதயத் திருநடனம் இனிக்காண்பது எக்காலம் (146)

வேதாந்த வேதம் எல்லாம் விட்டேறியே கடந்து
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம் (147)

பட்டம் அற்றுக் காற்றில் பறந்தாடும் சூத்திரம்போல்
விட்டு வெளியாக விசுவசித்தல் எக்காலம் (148)

அட்டாங்க யோகம் அதற்கப்பாலுக் கப்பாலாய்
கிட்டாப் பொருள் அதனைக் கிட்டுவதும் எக்காலம் (149)

ஒட்டாமல் ஒட்டி நிற்கும் உடலும் உயிரும்பிரித்தே
எட்டாப் பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம் (150)

151-160

[தொகு]

பாசத்தை நீக்கிப் பசுவைப் பதியில்விட்டு
நேசத்தின் உள்ளே நினைந்திருப்பது எக்காலம் (151)

ஆசார நேச அனுட்டானமும் மறந்து
பேசாமெய்ஞ் ஞானநிலை பெற்றிருப்பது எக்காலம் (152)

பல்லாயிரம் கோடிப் பகிரண்டம் உன்படைப்பே
அல்லாது வேறிலை என்றஃ அறிவது இனி எக்காலம் (153)

ஆதிமுதல் ஆகிநின்ற அரி என்ற அட்சரத்தை
ஓதி அறிந்நுள்ளே உணர்வது இனி எக்காலம் (154)

சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம் (155)

அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து
சொல்லும் உரை மறந்து தூங்குவதும் எக்காலம் (156)

இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெயும் போல
முயங்கும் அந்த வேத முடிவு அறிவது எக்காலம் (157)

ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகும்
நானாகி நின்றதனை அறிவது எக்காலம் (158)

என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னைவிட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம் (159)

இன்னதென்று சொல்லொண்ணா எல்லையற்ற வான் பொருளைச்
சொன்னதென்று நான் இறிந்து சொல்வது இனி எக்காலம் (160)

161-170

[தொகு]

மனதை ஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி எய்வது இனி எக்காலம் (161)

என்னை இறக்க எய்தே என்பதியை ஈடயித்த
உன்னை வெளியில் வைத்தே ஒளித்து நிற்பது எக்காலம் (162)

கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற் போல்
நடத்துகின்ற சித்திரத்தை நான் அறிவது எக்காலம் (163)

நின்றநிலை பேராமல் நினைவில் ஒன்றும் சாராமல்
சென்ற நிலை முத்தி என்று சேர்ந்தறிவது எக்காலம் (164)

பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தை உள் அமைத்து
மின்னும் ஒளிவெளியே விட்டு அடைப்பது எக்காலம் (165)

கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டது போல்
வீட்டில் அடைப்பட்டு அருளை வேண்டுவதும் எக்காலம் (166)

கடலில் ஒளித்திருந்த கனல் எழுந்து வந்தாற்போல்
உடலில் ஒளித்தசிவம் ஒளி செய்வது எக்காலம் (167)

அருணப் பிரகாசம் அண்டம் எங்கும் போர்த்ததுபோல்
கருணைத் திருவடியில் கலந்து நிற்பது எக்காலம் (168)

பொன்னில் பலவிதமாம் பூஷணம் உண்டானது போல்
உன்னில் பிறந்து உன்னில் ஒடுங்குவதும் எக்காலம் (169)

நாயில் கடைப் பிறப்பாம் நான் பிறந்த துன்பம்அற
வேயில் கனல் ஒளிபோல் விளங்குவதும் எக்காலம் (170)

171-180

[தொகு]

சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டது போல்
ஆரியன் தோற்றத்து அருள்பெறுவது எக்காலம் (171)

இரும்பில் கனல் மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க்
கரும்பில் சுவைரசத்தைக் கண்டறிவது எக்காலம் (172)

கருக்கொண்ட முட்டைதனைக் கடல் ஆமைதான் நினைக்க
உருக்கொண்ட வாறதுபோல் உனை அடைவது எக்காலம் (173)

வீடுவிட்டுப் பாய்ந்து வெளியில் வருவார்போல்
கூடுவிட்டுப் பாயும் குறிப்பறிவது எக்காலம் (174)

கடைந்த வெண்ணெய் மோரில் கலவாத தாறதுபோல்
உடைந்து தமியேன் உனைக்காண்பது எக்காலம் (175)

இருளை ஒளி விழுங்கி ஏகுருக் கொண்டாற்போல்
அருளை விழுங்கும் இருள் அகன்று நிற்பது எக்காலம் (176)

மின் எழுந்து மின் ஒடுங்கி விண்ணில் உறைந்தாற் போல்
என்னுள் நின்றது என்னுள்ளே யான் அறிவது எக்காலம் (177)

கண்ட புனல்குடத்தில் கதிர் ஒளிகள் பாய்ந்தாற்போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவது எக்காலம் (178)

பூணுகின்ற பொன் அணிந்தால் பொன் சுமக்கு மோஉடலை
காணுகின்ற என் கருத்தில் கண்டறிவது எக்காலம் (179)

செம்பில் களிம்புபோல் சிவத்தை விழுங்கு மிக
வெம்பிநின்ற மும்மலத்தை வேறு செய்வது எக்காலம் (180)

181- 190

[தொகு]

ஆவியும் காயமும் போல் ஆத்துமத்து நின்றதனை
பாவி அறிந்து மனம் பற்றி நிற்பது எக்காலம் (181)

ஊமை கனாக்கண்டு உரைக்க அறியா இன்பம் அதை
நாம் அறிந்து கொள்வதற்கு நாள் வருவது எக்காலம் (182)

சாகாச் சிவனடியைத் தப்பாதார் எப்போதும்
போகா உடல் அகன்று போவார் என்பது எக்காலம் (183)

நிட்டைதனை விட்டு நினைவறிவு தப்ப விட்டு
வெட்ட வெளியில் விரவி நிற்பது எக்காலம் (184)

வெட்டவெளி தன்னில் விளைந்தவெம் பாதத்தை
திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம் (185)

எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் வடிவாய்க்
கங்குல்பகல் இன்றி உனைக் கண்டிருப்பது எக்காலம் (186)

உண்டதுவும் மாதருடன் ஊடிச்சேர்ந்து இன்பம் எலாம்
கண்டதுவும் நீயெனவே கண்டு கொள்வது எக்காலம்(187)

ஈம் என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்
ஓம் என்று சொன்னதுவும் உற்றறிவது எக்காலம் (188)

சத்தம் பிறந்த இடம் தன் மயமாய் நின்ற இடம்
சித்தம் பிறந்த இடம் தேர்ந்தறிவது எக்காலம் (189)

போக்கு வரவும் புறம்புள்ளும் ஆகிநின்றும்
தாக்கும் ஒரு பொருளைச் சந்திப்பது எக்காலம் (190)

191-200

[தொகு]

நான் எனவும் நீ எனவும் நாம் இரண்டு மற்றொன்றும்
நீ எனவே சிந்தைதனில் நேர்படுவது எக்காலம் (191)

அறிவை அறிவால் அறிந்து அறிவும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பது இனி எக்காலம் (192

நீடும் புவனம் எல்லாம் நிறைந்து சிந் தூரம் அதாய்
ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம் (193)

தித்தி என்ற கூத்துத் திருச்சிலம்பின் ஓசைகளும்
பக்தியுடனே கேட்டுப் பணிவது இனி எக்காலம்(194)

நயனத்திடை வெளிபோய் நண்ணும் பரவெளியில்
சயனித் திருந்து தலைப்படுவது எக்காலம் (195)

அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்
திருவிளையாடல்கண்டு தெரிசிப்பது எக்காலம் (196)

மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கது போல்
தேனைமிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம் (197)

பொல்லாத காயம் அதைப் போட்டு விடுக்குமுன்னே
கல் ஆவின் பால் கறப்பக் கற்பது இனி எக்காலம் (198)

வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக்
கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம் (199)

பேரறிவிலே மனதைப் பேராமலே இருத்தி
ஓரறிவில் என்னாளும் ஊன்றி நிற்பது எக்காலம் (200)

201-210

[தொகு]

அத்துவிதம் போலும் என்ற ஆத்துமத்தின் உள்ளிருந்து
முத்திதான் நின்ற முறை அறிவது எக்காலம் (201)

நான் நின்ற பாசம் அதில் நான் இருந்து மாளாமல்
நீ நின்ற கோலம் அதில் நிறைவி நிற்பது எக்காலம் (202)

எள்ளும் கரும்பும் எழு மலரும் காயமும் போல்
உள்ளும் புறம்புநின்று உற்றறிவது எக்காலம் (203)

அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்பதுபோல்
என்னை வகுத்து உன்னை இனிக்காண்பது எக்காலம் (204)

அந்தரத்தில் நீர் பூத்து அலர்ந்தெழுந்த தாமரை போல்
சிந்தை வைத்துக் கண்டு தேரிசிப்பது எக்காலம் (205)

பிறப்பும் இறப்பும் அற்றுப் பேச்சும்அற்று மூச்சும் அற்று
மறப்பும் நினைப்பும் அற்று மாண்டிருப்பது எக்காலம் (206)

மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்து அறிவை
என்னும் ஒரு நினைவை எழுப்பி நிற்பது எக்காலம் (207)

ஆசை கொண்ட மாதர் அடை கனவு நீக்கி உன்மேல்
ஓசை கொண்டு நானும் ஒடுங்குவதும் எக்காலம் (208)

தன் உயிரைக் கொண்டு தான் திரிந்த வாறது போல்
உன் உயிரைக் கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம் (209)

சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலை இனிக்
காற்றில் உழல் சூத்திரமாய்க் காண்பது இனி எக்காலம் (210)

211-220

[தொகு]

என் வசமும் கெட்டு இங்கிருந்த வசமும் அழிந்து
தன் வசமும் கெட்டு அருளைச் சார்ந்து இருப்பது எக்காலம் (211)

தன்னை மறந்து தலத்து நிலை மறந்து
கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம் (212)

என்னை என்னிலே மறைந்தே இருந்த பதியும் மறந்து
தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம் (213)

தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே
உன்னை நினைந்துள்ளே உறங்குவதும் எக்காலம் (214)

இணை பிரிந்த போதில் அன்றி இன்பமுறும் அன்றிலைப் போல்
துணை பிரிந்தபோது அருள் நூல் தொடர்ந்துகொள்வது எக்காலம் (215)

ஆட்டம் ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல்
தேட்டம் அற்ற வான் பொருளைத் தேடுவதும் எக்காலம் (216)

முன்னை வினையால் அறிவு முற்றாமல் பின் மறைந்தால்
அன்னை தனைத்தேடி அமுதுண்பது எக்காலம் (217)

கள்ளுண்டவர் போல் கனிதரும் ஆனந்தம் அதால்
தள்ளுண்டு நின்றாடித் தடைபடுவது எக்காலம் (218)

தான் என்ற ஆணவமும் தத்துவமும் கெட்டொழிந்தே
ஏன் என்ற பேச்சும் இலாது இலங்குவதும் எக்காலம் (219)

நான் அவனாய்க் காண்பதெல்லாம் ஞானவிழியால் அறிந்து
தான் அவனாய் நின்று சரண் அடைவது எக்காலம் (220)

221-231

[தொகு]

தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவில்
ஆனந்தம் கண்டே அமர்ந்திருப்பது எக்காலம் (221)

உற்ற வெளிதனிலே உற்றுப் பாரத்து அந்தரத்தே
மற்றமற மாய்கை மாள்வது இனி எக்காலம் (222)

ஏடலர்ந்த பங்கயமும் இரு கருணை நேத்திரமும்
தோடணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம் (223)

ஐயாறும் ஆறும் அகன்று வெறு வெளியில்
மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம் (224)

காட்டும் அருள் ஞானக் கடலில் அன்பு கப்பல் விட்டு
மூட்டும் கருணைக் கடலில் மூழ்குவதும் எக்காலம் (225)

நான் யாரோ நீ யாரோ நன்றாம் பரமான
தான் யாரோ என்று உணர்ந்து தவம்முடிப்பது எக்காலம் (226)

எவர் எவர்கள் எப்படிக் கண்டு எந்தப்படி நினைத்தார்
அவர் அவர்க்கு அப்படி நின்றான் என்பது எக்காலம் (227)

உற்றுற்றுப் பார்க்க ஒளிதரும் ஆனந்தம் அதை
நெற்றிக்கு நேர்க்கண்டு நிலைப்பது இனி எக்காலம் (228)

விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல்
களங்கமற உன் காட்சி கண்டறிவது எக்காலம் (229)

என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்னதெல்லாம்
முன்னையோர் கைக் கொள்ள முன்பணிவது எக்காலம் (230)

ஐஞ்சு கரத்தானை அடி இணையைப் போற்றி செய்து
நெஞ்சில் பொருத்தி நிலை பெறுவது எக்காலம் (231)

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பத்திரகிரியார்&oldid=1394278" இலிருந்து மீள்விக்கப்பட்டது